பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

183



ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரை யாகிக் கழிவரே” (பொது)

எனப் பாடியுள்ளார். நாவுக்கரசர் காலத்தில் தமிழகத்தில் சமணமும் புத்தமும் மக்களால் பின்பற்றப்பட்டிருந்தன என்பது வரலாறு. காக்கைக்கு இரையாகுவர் என்பதும், அவர்தம் உடல்கள் வெளியில் போடப்படும் என்பதற்குத் தக்க சான்றாகும். இந்தக் காலத்தில் இப்பழக்கம் இல்லாதது நலம்.

பிணங்களைத் தாழியில் (சாலில்) அடைத்துவைக்கும் பழக்கமும் இருந்தது. இந்தச் சாலுக்கு ‘முது மக்கள் தாழி’ என்பது பெயர். இது பல நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.

சிறாரைத் தூங்கச் செய்தல்

சிறுவர் கூட்டத்துடன் தேர் இழுத்து விளையாடிக் களைப்புற்றுத் தாங்கும் சிறார்களைக் காற்று கறுப்பன் (பேய் பிசாசு) அண்டாதவாறு, சிறார்காக்கும் பெண்கள், பேய்ப்பகையாகிய வேப்பிலை - வெண்சிறு கடுகுகளைச் சுற்றிப் போட்டுத் தூபம் காட்டிக் கண்ணேறு கழித்து உறங்க வைப்பார்களாம். இதனை

“தளர்நடை ஆயமொடு தங்கா தோடி
விளையாடு சிறுதேர் ஈர்த்து மெய் வருந்தி
அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலிக்
குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்குக்
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து
தூபங் காட்டித் தூங்குதுயில் வதியவும்” (7:54-59)

என்பதால் அறியலாம்.

இரவுக் காவல்

இரவில், அரண்மனையில் உள்ள நாழிகை வட்டில் (கடிகையாரம் போன்றது) காட்டும் நேரத்தைக் கொண்டு,