பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

19



அல்லவா? உயிர் போனால் திரும்பி வருமா? வேறொருவருடைய உயிரைத்தான் பொருத்த முடியுமா? அதனால் உடைமைகள் - உறுப்புகள் ஆகியவற்றினும் உயிர் சிறந்ததென்பது புலப்படு மன்றோ? மேலும் உடைமைகளே யில்லாத கோடிக்கணக்கான ஏழையெளியவர்கள் உலகில் வாழ்வதைக் காண்கின்றோமே? உடலுறுப்புகளை இயற்கையாகவோ - செயற்கையாகவோ இழந்துவிட்ட கூன், குருடர், நொண்டி, முடவர் எண்ணற்றவர்கள் உலகில் வாழக் காண்கின்றோமே! ஆனால் உயிர் போனபின் வாழ்ந்தவர்களை என்றேனும் எங்கேனும் யாரேனும் பார்த்ததுண்டா? உயிர் போனபின் பிணம் என்றல்லவோ பெயர்? அதன் நிலைதான் எல்லோர்க்கும் தெரியுமே! இத்தகைய காரணங்களினாலேயே, மற்றையவற்றைக் குறிப்பிடாமல், உயிரினும் ஒம்பப்படும் என்று உயிரையே குறித்தார் நம் வள்ளுவர்.

மற்றும், ஆசிரியர் உயிரைப்போல் ஒழுக்கம் ஒம்பப்படும் என்று கூறி உயிரும் ஒழுக்கமும் ஒரு நிலையுடையன என்று கூடக் கூறவில்லை; உயிரைக் காட்டிலும் ஒழுக்கம் ஒம்பப்படும் என்று கூறி உயிரினும் உயர்ந்த பொருளாக ஒழுக்கத்தைச் சிறப்பித்துள்ள மாட்சி மிகப் பாராட்டுதற் குரியதாகும். எனவே, உடைமைகளினும் சிறந்தன உடலுறுப்புகள், உடலுறுப்புகளினும் சிறந்தது உயிர், உயிரினும் சிறந்தது ஒழுக்கம் என்றாயிற்று. ஆகா! இதனினும் ஒழுக்கத்தின் உயர்வைச் சிறப்பித்தவர் எவர்? சிறப்பிக்கத்தான் முடியுமா?

நிற்க, ஒழுக்கம் உயிரினும் சிறந்தது என்பது எவ்வாறு பொருந்தும்? ஒழுக்கம் மட்டும் இருந்து உயிர் போய்விட்டால் மட்டும் உலகில் வாழ முடியுமா? என்பவற்றையும் ஆராய வேண்டும். ஏசுநாதர் போன்றோர் எதற்காக உயிரை விட்டனர்? உலகில் ஒழுங்கு முறையை (ஒழுக்கமுறையை) நிலை நாட்டவல்லவா? தாம் மேற்கொண்ட செயல்களால்