பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

209



என்பதற்கு ‘மூளை’ என்பது பொருள். எழுத்துத் தமிழில் இதனைத் ‘தலைச்சோறு’ என்று சொல்ல வேண்டும். தலை உச்சியில் உள்ள மூளைக்குச் சோறு என்னும் பெயர் உள்ளதை அறிந்தபோது, எனது இளமைக் கால நிகழ்ச்சி யொன்று நினைவுக்கு வந்தது. எனது இளம் பருவத்தில் எங்கள் தோட்டத்தில் ஒரு தென்னை மரத்தை வெட்டி னார்கள். தென்னையின் உச்சித் தலைப் பகுதி வெட்டப் பட்டுக் கீழே விழுந்ததும், ‘சோற்றைத் தோண்டி எடுங்கள்’ என்று ஒருவர் கூறினார். உச்சியிலிருந்து வெண்மையான ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. அது பலர்க்கும் பங்கிட்டுத் தரப்பட்டது. நான் என் பங்கைத் தின்றபோது அது மிகவும் சுவையாயிருக்கக் கண்டேன். அந்தப் பகுதிக்குச் சோறு என்னும் பெயர் உண்டு என்பதை நான் அப்போது தான் தெரிந்து கொண்டேன். ‘தலச்சோறு’ என்னும் மலையாளப் பெயரோடு பொருத்திப் பார்த்தபோது மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. ‘மண்டையிலே மசாலா இருக்கிறதா’ என்று சிலர் கேட்பது இங்கே ஒப்புநோக்கத் தக்கது.

மண்ணான்

மலையாளத்தில் உள்ள மற்றொரு சொல் சுவையாயுள்ளது. தமிழில் உள்ள ‘வண்ணான்’ என்பது மலையாளத்தில் ‘மண்ணான்’ என்று வழங்கப்படுகிறது. வண்ணான்- மண்ணான் என்றால் சலவைத் தொழிலாளி (Washerman) என்பது பொருள். இந்தக் காலத்தில் வண்ணான் என்று சொன்னால் அது குறைவாகத் தோன்றுகிறது; அந்த இனத்தார் சினம் கொள்வர் - வருத்தப்படுவர். குறைவோ வருத்தமோ தராத சொல்லாக ‘ஏகாலி’ என்பது சிற்றுார்ப் புறத்தும், ‘சலவைத் தொழிலாளி’ என்பது நகர்ப்புறத்தும் இப்போது வழங்கப்படுகின்றன. வண்ணான், மண்ணான் என்னும் சொற்கட்கும் ‘சலவைத் தொழிலாளி’ என்பதே பொருளாகும்.