பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

மனத்தின் தோற்றம்



இல்லையில்லை பரிசு - இல்லையில்லை கைதும்" (இலஞ்சமே) அவை குடிக்கும் தேனாகும். இப்படிச் சொன்னால் ஒன்றும் புரியாதுதான்! இதனை கண்டு விளக்கமாகச் சொல்லவேண்டும். அதற்காக நாம் இங்கே பொதுவாகப் பூ காய் (கனி) ஆகியவற்றின் வரலாற்றை ஆராய்ந்து காணவேண்டும். இனி அவ்வாராய்ச்சியில் ஈடுபடுவோம்:

பூவின் வரலாறு

இங்கே விளக்கத்திற்காகப் பூவரசம் பூவினை எடுத்துக் கொள்வோம். நகரங்களிலுள்ள சிலர் அறியாவிடினும், சிற்றுரர்களில் உள்ள பலரும் பூவரசம் பூவினைப் பற்றி நன்கு அறிந்திருப்பர். சிறுவர் சிறுமியர் பூவரசம் பூவைப் பறித்துப் பாவாடை கட்டிய பெண்குழந்தைபோல் பொம்மை செய்தும், இதழ்களைக் களைந்தெறிந்துவிட்டு அடியிலிருக்கும் காய்ப் பகுதியைக் கம்மலாகவும் பம்பர மாகவும் பயன்படுத்தியும் விளையாடுவது வழக்கம். எனவே, சிறார்களும் நன்கறிந்த பூவரசம் பூவினை எடுத்துக் கொள்வது பொருத்தந்தானே. மேலும் அது பூக்களுக்குள்ளே அரசன் அல்லவா? ஆகவே, அதைப்பற்றித் தெரிந்து கொள்வது, மற்ற பூக்களைப்பற்றித் தெரிந்து கொள் வதற்குப் பெரிதும் துணை புரியும்.

பூவரசங் கிளையின் கணுச்சந்துகளிலிருந்து நீண்ட காம்புகளுடன் பூக்கள் தோன்றுகின்றன. காம்புக்கு ‘விருந்தம்’ (Pedicel) என்று பெயர் கூறுகின்றனர் மர (தாவர) நூலார். இதனை மலரின் தாள் என்றும் சொல்லலாம். விருந்தத்தின் நுனியில் ஒரு கிண்ணம் பூவின் மற்ற பகுதிகளை உள்ளடக்கி மூடிக்கொண்டிருக்கும். சிறிய அரும்பாயிருந்தபோது மூடிக்கொண்டிருக்கும் இக் கிண்ணம், பெரிய மொட்டானதும் மேற் புறத்து விரிகிறது. உடனே உள்ளிருக்கும் பாகங்கள் வெளிப்பட்டு வளருகின்றன. இப்