பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

47



மாண்ட வரதன் = மாண்பு மிக்க இராமன். தன் திருவடிகளை இராமன் வணங்கும் அளவுக்கு அகத்தியன் உயர்ந்தவனாவான்.

அகத்தியன் நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் என்பது ஆய்விற்கு உரியது. நேமி = ஆழிப்படை. இங்கே நேமி என்பது இடப்பொருள் (தானி) ஆகுபெயராய் நேமியை உடைய திருமாலைக் குறிக்கிறது. திருமால் மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு உலகம் முழுவதையும் அளந்தார். அல்லவா? அத் திருமாலைப் போல, அகத்தியன் தமிழால் உலகை அளந்தானாம்.

தமிழால் உலகை அளத்தலாவது, உலகம் முழுவதிலும் தமிழைப் பரவச் செய்தலும், உலகில் உள்ள கலைகளை யெல்லாம் தமிழில் உளவாகச் செய்தலுமாம். இதனால், பண்டு உலக அரங்கில் தமிழுக்கு இருந்த முதன்மையும் சிறப்பும் விளங்கும். -

நீண்ட தமிழ் என்பது, தமிழில் பல்வேறு கலைநூல்கள் நிரம்ப இருந்தமையையும், அது நீண்ட தொலைவில் உள்ள இடங்களில் எல்லாம் பரவியிருந்தது என்பதையும் அறிவிக்கும்.

இப்போது தமிழை உயர்த்தும் நோக்கத்துடன் தமிழின் சிறப்பைக் கூறினால், தமிழ் வெறியர் என்னும் பட்டம் கிடைக்கின்றது. கம்பர் இங்கே அறிவித்ததை விட இன்னும் உயர்வாக எந்தத் தமிழ் வெறியரும் தமிழின் மேன்மையைச் சொல்ல முடியாது. தமிழ் அறிஞர்களைத் தாழ்த்திப் பேசுபவரின் மொழியில் சொல்லப் போனால் கம்பர் மாபெருந் தமிழ் வெறியராவார்.

சேக்கிழார் பெரிய புராணத்தில் இதையே சுருக்கி

“ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்” (975)