பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

87



ஆனால், கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதைப்போல் குளிர்ச்சிக்காகச் செய்த முயற்சிகளெல்லாம் தவிடுபொடியாயின. ஒரே வெப்பம்! ஒரே வெப்பம்! சந்தனக் குழம்பு கொதிக்கின்றது. மலர்கள் கருகின. முத்துமாலைகள் பொரிந்தன. வெட்டிவேர் விசிறி வீசுகின்றது அனலை. வாழைக் குருத்து இருக்குமிடமே தெரியவில்லை. என்ன செய்வாள், ஐயோ! போதாக்குறைக்கு அந்தப் பொல்லாத நிலவோனும் (சந்திரனும்) பொசுக்குகின்றான். எல்லார்க்கும். இன்பம் தரும் நிலாக்காரன் வசந்தவல்லிக்கு மட்டும் வெப்பம் வீசுபவனாக வெளிப்படுகிறான். அந்தோ! இது. தான் காமத்தியின் இயற்கைபோலும்!

வெப்பம் தாங்கமுடியாத வசந்தவல்லி அந்த வெண்ணிலாவை நோக்கி வெந்து விளம்பத்தொடங்கு கின்றாள். "ஏ நிலவே கண்ணிலிருந்து நெருப்பைக் கக்கும் அந்தச் சிவன் முடியில் சேர்ந்து சேர்ந்து, நீயும் நெருப்பை வீசக் கற்றுக்கொண்டாயோ? தண்ணிய - குளிர்ந்த அமிழ்தமும் நிலவும் திருமகளும் திருப்பாற்கடலி லிருந்து தோன்றியதாகப் புராணங்கள் புகலுகின்றனவே! தண்ணிய அமிழ்தத்தொடு நீயும் பிறந்தாய் என்றால் நீ மட்டும் ஏன் அந்தத் தண்மையை மறந்தாய்? பெண்ணோடு பிறந்தவர்களுக்குப் பெண்டிர்மேல் இரக்கம் இருக்கும் என்று சொல்வார்களே! திருமகளோடு பிறந்த நீ மட்டும் ஒரு பெண்ணாகிய என் மேல் ஏன் இரக்கம் கொள்ளாமல் வெப்பத்தை வீசுகின்றாய்? அப்படி என்றால் அவையெல்லாம் புராணங்கள் புளுகிய பொய்தானோ?” என்று புலம்பு கின்றாள் வல்லி. இதனைப் பாடல் வடிவில் பார்ப்போம்.

“தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே - அந்தத்
தண்ணளியை ஏன் மறந்தாய் வெண்ணிலாவே
பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே - என்றன்
பெண்மை கண்டும் காயலாமோ வெண்ணிலாவுே.”