பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கிரகணத்தன்று எழும் கொந்தளிப்பு போல் என்னுள் அந்தத் துயர அலை வீசிக் கொண்டிருந்தது. என்னல் தாங்க முடியவில்லை. மீண்டும் ஜகத்குருவை தரிசித்தா லன்றி எனது துயர் நீங்காதுபோல் தோன்றியது. எனவே அவர் பங்களுரில் விஜயம் செய்திருந்தபோது போனேன். அவரது பாதங்களில் விழுந்து வணங்கினேன். "இங்கு வருவாய் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றார் அவர் புன்னகை தவழும் முகத்துடன். இது நான் எதிர்பாராதது அன்று. பழக்கப்பட்ட ஒன்றே. மீண்டும் அவருடன் சில நாட்கள் தங்கி இருந்தேன். அவர் சந்நிதியில் எனது துயர் நீங்கப் பெற்றேன். ஜகத்குருவின் முகாம் வேறு ஊருக்குச் சென்றது. நான் எனது ஊர் திரும்பினேன்.

எனது துயரமும் என் கூடவே வந்தது. துயரம் என்று சொன்னால் இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது. தாங்க முடியாத துயரம். பொறி புலன்கள் எல்லாம் கலங்கின. துயரத்தில் மூழ்கினேன். நெஞ்சு விம்மியது; வெடித்துவிடும் போல் ஆயிற்று. மற்றவர் கண்களை நோக்க அஞ்சினேன்.

இதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழிகான முடியாதவன் ஆனேன். சிருங்கேரி சென்று ஸ்ரீ ஜகத்குரு சந்திரசேகர பாரதி மகாஸ்வாமி அதிஷ்டானம் முன்பு விழுந்து வணங்க வேண்டும் என்ற துடிப்பு உள்ளத்திலே எழுந்தது. சிருங்கேரி செல்ல முடிவு செய்தேன். பாரத தேசத்தின் திசையெங்கும் வெற்றி விஜயம் செய்துவிட்டு ஸ்ரீ ஜகத்குரு அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமி சிருங்கேரி திரும்புகிறார் என்ற செய்தி கேட்டேன்.