பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

இனி ஒரு கணமும் தாமதிக்க என்னால் இயலவில்லை. ரயில்வே கால அட்டவணையைப் புரட்டினேன். எனது நண்பர் யுஜிகே வந்தார். ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்துக் கொண்டோம். சுவிஸ் நாட்டு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பலநாள் தனி வாழ்வு வாழ்ந்தவர் அவர். இந்தியாவுக்குத் திரும்பும் எண்ணங் கொண்டு விட்டதாக அவர் கூறினார். தென்னிந்தியாவிலேயே ஓர் ஆசிரமம் அமைத்துக் கொள்ள ஏற்ற இடம் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னர். அந்த இடம் எப்படி இருக்கவேண்டும் என்றால் அதிக வெப்பமும் கூடாது. அதிக குளிரும் கூடாது. கடலுக்கு அருகிலுங் கூடாது. உயர்ந்த மலைப் பகுதியும் கூடாது. எப்போதும் வற்றாத நீர் உள்ள இடமாயிருக்க வேண்டும். சிநேக பாவத்துக்குப் புகழ் பெற்றதாயிருக்க வேண்டும். போக்குவரவு வசதியிருக்கவும் வேண்டும். இப்படிப்பட்ட ஓரிடம் தேவை என்றார் அவர். சிருங்கேரியே ஏற்ற இடம். ஆன்மீக சக்தி அலைவீசிப் புரளும் இடம் அதுவே" என்றேன். எனது நண்பர் தலையசைத்தார். "நான் சிருங்கேரியைப் பார்த்த பிறகுதான் முடிவு செய்ய முடியும்" என்றார் அவர்.

"சரி" என்று சிருங்கேரிக்குப் புறப்பட்டோம். எங்களுடன் வி.டி.கே அம்மையாரும் வந்தார். அவர் அந்நிய நாட்டினர். எனது நண்பரின் நண்பர். இந்தியாவில் உல்லாசப் பொழுதுபோக்க வந்தவர்.

சுற்றுலா மகிழ்வு கருதியோ இயற்கை வனப்பிலே ஈடுபட்டு மகிழவோ நான் சிருங்கேரி போகவில்லை. இழந்த அமைதியை மீண்டும் பெறவேண்டும் என்ற