பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

உறுதி - மறத்துவிட்ட சிந்தனையை மறுபடி நினைவுக்குக் கொண்டுவர - பல ஆண்டுகள் முன்பு இழந்த ஒன்றைத் தேடிப் பிடிக்க - நான் மேற்கொண்ட உறுதி காரணமாக எழுந்த செயலே அது. இப்போது மீண்டும் சிருங்கேரி வந்து விட்டேன். இயற்கை வனப்பு நிறைந்த இடம். நாகரிகத்தின் கால்பட்டுத் தேயாத தனியிடம்.

உலகத்திலே தோன்றும் பெரிய பெரிய மாறுதல்களை எல்லாம் கண்ணாரக் கண்டும், அவற்றிலே சிக்கிவிடாமல், எட்டி நின்று சிந்தை மட்டும் செலுத்துவதற்குரிய வாய்ப்பை சிருங்கேரியின் தனிமை அந்த பீடத்திலே வாழையடி வாழையாக வந்த மாபெரும் துறவிகளுக்கு வழங்கியது. அதுதானே சீரிய வாழ்க்கை!

அமைதியாக, அநுதாபத்துடனே, விலகி நின்று மாந்தர் தம் துன்பம் கண்டு கழிவிரக்கம் கொள்ளலும் மதியினம் கண்டு புன்னகை பூத்தலும் காய்தல் உவத்தல் இன்றி - விருப்பு வெறுப்பின்றி - அவர் காட்டும் பரிவிலே பங்கு கொள்ளலும் அன்றே துறவு வாழ்க்கை ! பாரத பூமியின் இயற்கை தந்த பொக்கிஷம். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்சிகளும் துங்கை நதியின் அமைதியான ஒட்டமும், பசுமை நிறைந்த தோற்றமும் மாறவில்லை. சென்ற கால் நூற்றாண்டுகளில் எவ்வித மாறுதலுமில்லை.