பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

யும் தன்பால் ஈர்த்து வழிகாட்டி அருள்கிறது. அந்த மகோன்னதமும், லாவண்யமும், அருள் சுரக்கும் பெரு நோக்கும் இந்திய நாட்டின் ஆன்மிக வரலாற்றிலே எதிரொலி செய்கின்றன, இந்த மலைகளிலேதான் மாபெரும் முனிபுங்கவர்கள் தங்கள் ஆசிரமங்களை அமைத்துக்கொண்டு தலைமுறை தலைமுறையாக ஆன்மிக அருள் மழை பொழிந்திருக்கிறார்கள்.

சிருங்கேரி வாழ் மக்கள் ஜகத்குரு சேவைக்கே தங்களை அர்ப்பணம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஸ்ரீ வித்யாரண்யர் காலத்துக்கு முன்பிருந்தே தங்கள் முன்னோர்கள் இந்த சேவை செய்து வந்ததாக அவர்களில் பலர் பெருமை கொள்கிறார்கள். அவர்களுடைய தினசரி சேவையிலும், அவர்களுடைய நடையுடை பாவனைகளிலும் இன்னும் இன்னோரன்ன பல வகைகளிலும் அவர்களுடைய பெருமிதம் பிரதிபலிக்கிறது.

பிரதேச மொழி கன்னடம். அதுதவிர ஓரளவு சம்ஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, தமிழ், இங்கிலீஷ். முதலிய எல்லா மொழிகளும் பலர் பேசுகின்றனர். வீடுகள் வசதியானவை. இரண்டடுக்கு மாடி உள்ளவை. பருவ மழையின் வேகத்தைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. வீட்டிற்குப் பின்புறத்தில் பெரிய கொல்லை. தென்னை, வாழை முதலிய மரங்களும் காய்கறித் தோட்டமும் உண்டு. இடை இடையே சில பாக்கு மரங்கள். ஒவ்வொரு வீட்டிலும் சில பசுக்கள். குள்ளமான கறு நிறப் பசுக்கள். துடிதுடிப்பும் ஆரோக்கியமும் மிக்க பசுக்கள்.

2