பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

பங்களூரில் குடியேறினேன். தினசரி வேலைகளில் ஈடுபட்டேன். விடியற்காலை 5 மணிக்கு முன்பே எழுந்திருப்பேன். காலைக் கடன்களை முடிப்பேன். குளிர்ந்த நீரில் தலை மூழ்குவேன். காலை சந்தியாவந்தனத்தை முடித்துவிட்டு அவசர அவசரமாக டிபன் சாப்பிட்டு விட்டு எனது சைகிளில் ஏறி அந்த மார்கழி மாதத்துப் பனியிலே நடுக்கும் குளிரிலே பறப்பேன்.

ஒரு சிறு வீடு. அந்த வீட்டின் முன் தாழ்வாரத்திலே ஒரு சிறு அறை. அதிலே குடியிருந்தேன். கன்னட பிராமணர் ஒருவர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார். அவர் ஒரு பாங்கிலே உத்தியோகம் வகித்து வந்தார். வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். வழுக்கை விழுந்த தலை. அமைதியான தோற்றம். அதிலே ஒரு ஏமாற்றம் நிறைந்த பார்வை. ஒருகால் அது பிள்ளைகுட்டி இல்லாததால் ஏற்பட்ட ஏமாற்றமோ என்னவோ ? அந்தப் பெண்மணி வயதில் இளையவர்போல் காணப்பட்டாள். எனினும் தலை நரைத்து இருந்தது. அன்பான உள்ளம். சுலபத்தில் இளகிவிடக்கூடிய தாய் மனம்.

நான் அந்த வீட்டில் குடிபுகுந்து ஒரு வாரம் முடியவில்லை. தினமும் விடியற் காலையில் எழுந்து அந்தக் குளிரில் நான் தண்ணிரில் குளிப்பதை அந்த அம்மாள் கவனித்தாள். எனது வளர்ப்புத் தாயானாள். குளிர்ந்த நீரில் குளிப்பது நின்றது. வெந்நீரில் குளிக்கத் தொடங்கினேன். அடிக்கடி அவர்களுடன் சாப்பிடத் தொடங்கினேன். நான் வேறு அவர்கள் வேறு என்று வெளியாருக்குத் தெரியாது. அன்புப் பெற்றோரும் அருமை மகனும் போல் ஆனோம்.