பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

களை நோக்கியவாறு நடந்தேன். மெதுவாகப் பாலத் தைக் கடந்தேன். அமைதியான அந்த அந்திப் பொழுதிலே நரசிம்ம வனத்துள் புகுந்தேன். எனது வளர்ப்புப் பெற்றோர் பின்னே சிறிது தூரத்தில் வந்தனர்.

எதிர்பாராத ஓர் உணர்ச்சி-இன்னதென்று விவரிக்க முடியாத ஒர் உணர்ச்சி-எனது உள்ளத்தின் அடித் தளத்தினின்று தோன்றியது.

நரசிம்ம வனம் ஓர் அழகிய சூழ்நிலையிலே அமைந்திருந்தது. குன்றுகளும் குவிந்த சிகரங்களும் பின்னணியாக விளங்கின. நடந்து நடந்து தேய்ந்த ஒற்றையடிப் பாதை. ஆற்றின் மறு கரை நோக்கினேன். வித்யா சங்கரர் ஆலயத்தின் மகோன்னத வேலைப்பாடுகளைக் கண்களால் பருகினேன். அங்கிருந்து எனது கண்களைத் திருப்பினேன். பறவைகளின் சிறகொலி கேட்டேன். இரவில் தங்குவதற்காக அவை தங்கள் தங்கள் மரங்கள் நோக்கிச் சென்றன. நரசிம்ம வனம், அதன் மரங்கள், தோட்டங்கள், அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, சிறு குடில்கள் எல்லாம் உபநிஷத கால ஆசிரமத்தை என் கண்முன் கொண்டுவந்து நிறுத்தின.

அந்த ஒற்றையடிப் பாதை வழியே அதிஷ்டானம் சென்றோம். அங்கே காவி தரித்த ஓர் உருவம் கம்பிரமாக நின்று கொண்டிருக்கக் கண்டேன். அவர் தம் ஒளி வீசும் கண்கள் என்னை நோக்கியவண்ணமிருந்தன. சற்றுத் தொலைவிலே ஏவலர் ஒருவர் பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தார். நான் எனது சட்டையைக் கழற்றினேன். அங்க வஸ்திரத்தை இடுப்புக்கு மேலே

3