பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

சுலபமாயின. புறத்தே மின்னாமல் அகத்தே ஒளிவீசத் தொடங்கியது.

"சிருங்கேரி உனது எனது குழந்தாய் நீ வரும் போதெல்லாம் உன்னை அன்புடன் கவனிக்க நான் இருக்கிறேன்." என்று சொல்லியவாறு அவர் சென்றார். அவரது அமானுஷிக உயர்வும், துறவியின் சிறப்பும் என் உள்ளத்திலே ஆழமாகப் பதிந்தன. சந்தேகத்துக்கிட மில்லாமல் செய்தன. அவர் என்முன் தோன்றி என்னுள்ளே அவரது ஆத்ம ஒளியின் ஒரு கிரணத்தைப் பாய்ச்சுவது போல் இருக்கிறது.

அதற்குப் பிறகு எப்போதும் எந்நாளும் அவரை நினைத்த வண்ணமே இருக்கிறேன். நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் அவர் அன்று எனக்களித்த பரமார்த்திக அனுப வரப்பிரசாதத்தை எண்ணுகிறேன். அது என்னைப் பரவசப்படுத்துகிறது.

காலம் உருண்டோடி விட்டது. ஆனால் நான் கண்ட காட்சி மறையவில்லை. மகாஸ்வாமி எப்போதும் எனதருகில் அமர்ந்து அருளுடன் அமைதியாக என்னையே கவனித்துக் கொண்டிருக்கிறார்.

இன்று - நான் மீண்டும் வந்துள்ளபோது - அதே புன்னகை பூத்த அருள் நோக்குடன் அவர் என்னை கவனிக்கிறார்.

கொஞ்ச நேரம் சென்றது. அதிஷ்டானத்திலிருந்து எழுந்தேன். வணங்கினேன். மீண்டும் மீண்டும் வணங்கினேன். அந்தத் தேய்ந்த ஒற்றையடிப் பாதை வழியே சச்சிதானந்த ஆசிரமத்துக்கு உந்திச் சென்றது ஏதோ ஒரு சக்தி.