பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தத்துவ ஞானம் செயல் முறையில் கொண்டுவரப்படுகிறது.

இவ்வாறு நான் சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது ஜகத்குரு வெளியே வந்தார். புன்சிரிப்புடன் என் முகத்தை நோக்கினர். நான் வணங்கினேன்.

எல்லாருக்கும் தீர்த்தம் கொடுத்து அனுப்பினர். கடைசியாக எனக்குக் கொடுத்தார். பிறகு உள்ளே சென்றார். பின் தொடருமாறு என்னை அழைத்தார். உள்ளே சென்றேன். நேற்று மாலை அங்கிருந்தது போன்ற பழக்கப்பட்ட உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. மகாஸ்வாமியின் படங்கள் சுவர்மீது மாட்டப்பட்டிருந்தன. சென்ற முறை நான் காணாத புதிய அம்சம் இது ஒன்றே. கால் நூற்றாண்டு முன்பு நான் உட்கார்ந்த அதே அறையில் ஜகத்குரு சென்றார். மரப்பலகை மீது விரிக்கப்பட்டிருந்த புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்தார். மகாஸ்வாமி உட்கார்ந்த பழைய மரப் பலகை என்றே தோன்றியது. குரு பாதுகைகளும் இருந்தன. அவற்றை வணங்கினேன். அதை ஆமோதிப்பவர் போல் ஜகத்குரு புன்முறுவல் பூத்தார். உட்காருவதற்கு அறிகுறியாக என்னை நோக்கினர். கொஞ்ச தூரத்தில் உட்கார்ந்தேன். அன்பொழுகும் புன்னகையுடன் என்னே நோக்கினர்.

ஜகத்குருவின் ஆதரவில் இருக்கிறோம் என்ற உணர்ச்சி என்னைக் கவிந்து கொண்டது, என்னுள்ளே ஏதோ ஒருவித உணர்ச்சி பொங்கியது. உபநிஷத ரிஷிகளைப் போல் அவர் காட்சியளித்தார். மெதுவாகப் பேசினர்.