பக்கம்:முந்நீர் விழா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மு ந் நீர் விழா

பாண்டியன் மாகீர்த்தி தன் சிங்காதனத்தில் வீற்றிருந்தான். அமைச்சரும் புலவரும் சுற்றி அமர்ந்திருந்தனர். அரசனுடைய பல்வகைப் புகழையும் யாவரும் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். -

கீழ் கடற்கரைக்கு ஒரு மாதத்திற்கு முன் பாண்டியன் சென்றிருந்தான். அங்கே கடற்கரை நகரத்தில் சில நாட்கள் தங்கியிருந்தான். முத்துச் சலாபம் அப்போது நிகழ்ந்தது. முத்தெடுத்துக் கரையிலே குவித்த மாவீரர்களை அவன் அன்புடன் நல்லுரை கூறிப் பாராட்டினன். கடலின் அடி வயிற்றிலிருந்து எடுத்த முத்துக்களைச் சுத்தப்படுத்தி நட்சத்திரத்தைக் குவிப்பது போலக் கடற்கரை அரண்மனைக் கூடத்தில் குவித்திருந்தார்கள். பாண்டி நாட்டு முத்து என்றால் அதற்கு எப்போதுமே தனிச் சிறப்பு. உலகம் எங்கும் கடல் பரவி இருக்கிறது. எல்லாக் கடல்களிலும் மீன் பிடிக்கலாம். சில கடல்களில்தான் முத்து எடுக்கலாம். அவற்றிலும் சில துறைகளில்தான் சிறந்த முத்துக்கள் கிடைக்கும். பாண்டி நாட்டுத் துறையில் கிடைக்கும் முத்துக்கள் மிக மிக அற்புதமானவை. யவன நாட்டு மடமங்கையர் விரும்பி அணியும் நித்திலங்கள் அவை. ஆதலின், தமிழ் நாட்டு முத்து வெளி நாடுகளுக்கெல்லாம் சென்று பெயர் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/10&oldid=1214557" இலிருந்து மீள்விக்கப்பட்டது