பக்கம்:முந்நீர் விழா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

முந்நீர் விழா



மாண்டனர். அந்நாடுகளில் அவருக்கு அடுத்த உரிமை யாளருக்கு அரசு நல்கினான் பாண்டியன்.

நாளுக்கு நாள் படை வீரர்களின் விறல் ஓங்கியது. பாண்டியனுடைய வீரம் விளங்கியது. அவன் வாகையின் மேல் வாகையாகச் சூடினான். தான் பெற்ற வெற்றிகளை இப்போது பாண்டியன் அளவிட்ட முறையே வேறு. எத்தனை மன்னர்களை வென்றோம் என்று அவன் கணக்கிடவில்லை. எத்தனை நாடுகள் நம்மைப் பணிந்தன என்பதையும் அவன் எண்ணிப் பார்க்கவில்லை. தன் தலைநகரை விட்டு எவ்வளவு தூரம் வந்தோம் என்றும் அளவிட்டுப் பார்க்கவில்லை. தென் கடலை நாம் அணுகிக் கொண்டிருக்கிறொம் என்ற ஒரே நினைவில்தான் அவன் திளைத்திருந்தான். தென் கடல் அலைகள் அவனுக்கு வரவேற்புக் கூற, அந்த வடிம்பில் அலைகள் அடிகளை அலம்பும்படி நின்றால் அவன் வஞ்சினம் நிறைவேறும். பகையரசர்களை வெல்ல வேண்டும் என்று அவன் தோள் திணவெடுத்தது. அதற்குமேலே, தென் கடற்கரையில் நின்று அந்தக் கடல் நீரில் நனையவேண்டும் என்று அவன் கால்கள் திணவெடுத்து நடந்தன.

இன்னும் ஒரு காவத தூரத்தில்தான் இருந்தது. தென் கடற்கரை. அந்தக் கடல் நீரைக் காண்பதற்கு முன் போர்க் களத்தில் செந்நீரோட்டத்தைக் காண வேண்டியிருந்தது. துண்டுபட்ட உடல்களையும், சேறு பட்ட மூளையையும் வழும்பையும், ஆறாக ஒடும் குருதியையும் மிதித்து மிதித்துப் பாண்டியன் மாகீர்த்தியின் கால்கள் வீரச் செருக்குற்றிருந்தாலும் தூய்மை கெட்டிருந்தன. அவற்றை மீட்டும் கடல் நீரில் அலசித் தூய்மை பெறச் செய்ய வேண்டும். மேல் கடல் அலை தன் காலை வருடும்போது இதைத்தான் அவன் சிந்தித்து ஏங்கினான். அந்த ஏக்கம் இன்னும் தீர்ந்தபாடில்லை. அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/17&oldid=1214714" இலிருந்து மீள்விக்கப்பட்டது