பக்கம்:முந்நீர் விழா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

முந்நீர் விழா


நாட்டை ஆண்டுவந்தான். இப்போது பாண்டி நாட்டு எல்லை விரிந்தது. தென் கடல் மூன்றாவது எல்லை ஆயிற்று. தன் படையினால் அளந்து வெற்றி பெற்று, அந்த எல்லையை அடைந்திருக்கிறான். நாட்டு எல்லை கடல் வரைக்கும் இருக்கிறது அல்லவா? இப்போது கடல் விளிம்பை நோக்கி நடந்து வருகிற பாண்டியன் தன் காலால் தன் வெற்றியை அளக்கிறான். தனக்கு அகப்படாதிருந்த தென் கடல் வரைக்கும் தன் நாடு விரிந்திருப்பதை மற்ற மன்னவர்கள் உணரும்படி, அவன் இப்போது அளந்து காட்டுகிறானோ! அவன் நடந்தான்; கடல் நெடுந்தூரம் விலகியிருப்பது போன்ற உணர்ச்சி அவனுக்கு. அது பக்கத்தில்தான் இருந்தது; ஆனாலும் அவனுடைய ஆவல் அப்படி இருந்தது.

கடல் விளிம்புக்கு வந்து நின்றான். தென் கடல், பல காலும் காணுது அலமந்து வரவு பார்த்திருந்த தன் நாயகனுக்குப் பாத்தியம் வழங்குவதுபோல, அலைகளால் அவன் அடியை அலம்பியது. அவனை இவ்வளவு அல்லலுக்கு ஆளாக்கியதற்காக அடி வீழ்ந்து புலம்பியது. அவன் அடியை அலைக் கரங்களால் வருடியது. தென் கடல் அலைகள் தன் அடியை வருடியபோது பாண்டிய மன்னன் பெற்ற இன்பத்துக்கு எல்லை ஏது? முன்னே விரிந்து கிடந்த கடலைப் போல இன்பம் உள்ளத்துள் எல்லையின்றிக் கொந்தளித்தது.

அவன் சற்றே உண்முக நோக்கில் ஒன்றினான் மூன்று கடல்நீரிலும் தன் அடியை நனைக்கவேண்டும் என்று அவன் உள்ளத்தே தோன்றிய எண்ணம், இவ்வளவு பெரிய போருக்கு விதையாயிற்று; இவ்வளவு மக்கள் போரில் பட்டு மடியும்படி விளைந்தது. தான் கடந்துவந்த போர்க்களங்கள் எல்லாம் அவன் அகப் பார்வையிலே தோற்றமளித்தன. அந்தக் களங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/19&oldid=1214719" இலிருந்து மீள்விக்கப்பட்டது