பக்கம்:முந்நீர் விழா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விச்சுளிப் பாய்ச்சல்

41

 ரசிக்கு அச்சம் மிகுதியாயிற்று; அரசன் கூறிய கடுஞ் சொல்லால், அன்று அவன் உள்ளம் அந்தப் பெண்ணை நாடுகிறது என்று எண்ணிக்கொண்டாள். பாண்டி நாட்டுக்கு அரசன் ஒரு கழைக்கூத்தியை விரும்புவதா அவள் இதை நினைக்கையிலே உடல் நடுங்கியது; வேர்த்தது.

அரசியின் உள்ளத்தில் புயல் மூண்டு அவளை அலைத்துக்கொண்டிருந்தது. அதே சமயத்தில், மற்ற அனைவரும் பொம்மைகளைப்போல ஆடாமல் அசையாமல் சிறிதும் மூச்சுப் பேச்சின்றி விச்சுளிப் பாய்ச்சலைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அந்தப் பெண் கம்பத்தின் மேல் ஏறி உச்சியை அடைந்துவிட்டாள். அவள் ஏறுகிற நெளிவுதான் எத்தனை ஆச்சரியம்! அவள் உடம்பு மெழுகினால் ஆனதோ அவள் வலிமையைப் பார்த்தால் இரும்பின் உரம் இருக்க வேண்டுமென்று தோன்றியது. வளையும் நெளிவைப் பார்த்தாலோ கொடி போல இருந்தது.

அதோ அவள் கம்பத்தின் உச்சியில் நிற்கிறாள், கீழே இருக்கிற ஆள். இவள் இனிப் பாயப்போகிறாள் என்பதைச் சொல்கிறான். அரசன் ஈந்த மோதிரம் அவன் கையில் இருக்கிறது. அதை வீசப்போகிறான். கம்பத்தின் உச்சியில் இருப்பவள் மீன்கொத்தியைப் போலப் பாய்ந்து அந்த மோதிரத்தைக் கவ்விக் கொண்டு, தரையில் குதிக்காமல் கம்பத்திலேயே ஒட்டிக் கொள்ளப்போகிறாள். அது எப்படி முடியும்? மோதிரத்தைப் பற்றிக் கொண்டு உடனே கம்பத்தைப் பற்றிக் கொள்வது எப்படி?

எல்லாருடைய கண்களும் கம்பத்தில், அதன் மேலுள்ள அந்த அழகிய பெண்ணுருவில் பதிந்து கிடந்தன. அவளுடன் அந்தக் கண்களும் விச்சுளிப் பாய்ச்சலுக்கு ஆயத்தமாக இருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/50&oldid=1207485" இலிருந்து மீள்விக்கப்பட்டது