பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

மண்ணை ஜியாரத்† [1] செய்வதற்காக புறப்பட்டு வந்த அரபிகளது ஆன்மீக தொடர்புகளாலும், இஸ்லாம் இந்த மண்ணில் வேரூன்றியது. இத்தகைய அரபி பயணிகளில் ஒருவரான ஷேக் ஐக்கியத்தின் என்பவரது ஆழமான அன்பாலும், இஸ்லாமிய ஞானத்தாலும் ஈர்க்கப்பட்ட கொடுங்கோளுர் மன்னன் சேரமான் பெருமாள், இஸ்லாத்தை தழுவியதுடன் கி பி. 825ல் புனித ஹஜ்ஜை மேற்கொண்டு அரபி நாடு சென்றவிவரத்தை வரலாற்று நூல்கள் விளம்புகின்றன. நாளடைவில் அவர் இஸ்லாத்தை தழுவி, அப்துல் ரஹ்மான் ஸாமிரி என்ற பெயருடன் அரபு நாட்டில் தங்கினார். அந்தப் புனித மண்ணில் தமது எஞ்சிய வாழ்க்கையைக் கழித்து, ஸபர் என்னும் நகரில் கி.பி. 828-ல் அவர் இயற்கை எய்தினார்.[2] இந்த மன்னர் வழங்கிய அறிமுக மடலுடன் கேரளம் வந்த மாலிக் இபுனு தினாரும் அவரது மக்களும் மேற்கு கடற்கரைப் பட்டினங்களில் இஸ்லாமிய பிரச்சார பணியில் ஈடுபட்டதுடன் முதல் முறையாக ஒன்பது தொழுகைப் பள்ளிகளை அந்த மாநிலத்தில் நிர்மாணித்ததாகவும் கேரள மாநில வரலாற்றுக் குறிப்புகளில் காணப் படுகின்றன.[3]

ஆனால், இவர்களுக்கு ஒருநூற்றாண்டிற்கு முன்னரே தமிழகத்தில், சோழர்களது கோலநகராக விளங்கிய உறையூரில் ஹிஜ்ரி 116-ல் (கி.பி.734) ஹாஜி அப்துல்லா பின் முகம்மது அன்வர் என்பவரால் அமைக்கப்பட்ட தொழுகை பள்ளியே தென்னகத்தில் இஸ்லாமியர்களால் நிர்மானிக்கப்பட்ட முதல் தொழுகைப் பள்ளியெனத் தெரிகிறது.[4] நாயக திருமேனியவர்கள் இஸ்லாமியர்களுக்காக தங்களது திருக்கரங்களால் மதினாவில் முதல் தொழுகைப் பள்ளியை† [5] அமைத்த ஒரு நூற்றாண்டு


  1. ஜியாரத் ; அரபிச்சொல் இசுலாமிய புனிதர்களது அடக்க இடங்களுக்கு சென்று வருதல் என்பது இஸ்லாமிய நெறியில் அனுமதிக்கப்பட்ட செயலாகும்.
  2. William Logan - Malabar Manual (1881)
  3. Gazetteer of Malabar and Amjemgo N.L. 8422
  4. கே. பி. எஸ். ஹமிது - இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி இரண்டாவது மாநாட்டு மலர் (1973) பக் : 51, 56.
  5. இந்தப் பள்ளிதான் இன்று மஸ்ஜிது நபவீ என வழங்கப்பட்டு வருடந்தோறும் இலட்சக்கணக்கான மக்களால் தரிசிக்கப்பட்டு வரும் ஸ்தலமாகும்.