பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நன்றியுரை

கடந்து சென்ற காலத்தின் சுவடுகள் வரலாறாக விளங்குகின்றன. பழைமையிலிருந்து புதுமை, நேற்றிலிருந்து இன்று–இவைகளுக்கு இடைப்பட்ட எல்லைகள் வரலாற்று நிகழ்வுகளாகும். மக்களின் வாழ்வும், தாழ்வும் இந்த நிகழ்வுகளில் மறைந்து இருக்கின்றன. ஒரு காலத்தில் உழைப்பும் முனைப்பும் மிக்க பிரிவினராக உயர்ந்து நின்றவர்கள் உறுதிப்பாடு இன்மையும் ஒழுக்கமின்மையும் காரணமாக, வலிவும் பொலிவும் இழந்து, நலிவும் அழிவும் பெறுகின்றனர். தமிழகத்து முஸ்லீம்களும் இந்த வளைந்த வரலாற்றுக்கு விலக்கானவர்கள் அல்லர்.

ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, கீழைக்கடற்க்ரை எங்கும் அஞ்சு வண்ணங்களில் தனித்து வாழத் தொடங்கிய முஸ்லீம்கள், தமிழகத்தைச் சாடிய இந்து, சமண, பெளத்த, சைவ, வைணவ சமய தாக்கங்களுக்கு இடையில் இறைவழியாகிய ஏகத்துவத்தை ஏந்திய குடிகளாக வாழ்ந்தனர். வணிக வளர்ச்சி, சமயப்பணி, அரசியல் ஊக்குவிப்பு ஆகிய காரணங்களினால் தனிமையை ஒழித்து தமிழ்ச்சமுதாயத்தில் ஒன்றி உறவாடி நாளடைவில் தமிழராகவே மாறினர். தமிழ்ச்சமுதாயத்தின் செம்மைக்கும் செழுமைக்கும் ஏற்ற தொண்டுகளையும் செய்து வந்துள்ளனர்.

குறிப்பாக, தங்களது தாய் மொழியான தமிழ் வளர்ச்சிக்கு அவர்கள் செய்துள்ள பணி எல்லோராலும், எல்லாக்காலத்தும் நினைவுகூரத் தக்கதாக உள்ளது. பதினேழாவது பதினெட்டாவது நூற்றாண்டுகளில் வேற்று மொழியினரது ஆட்சியின் விளைவுகளாக தமிழும் தமிழ்ப் புலவர்களும் புறக்கனிக்கப்பட்டனர். அவர்களது தமிழ்ப் பணியை அப்பொழுது ஊக்குவித்து பல தமிழ் இலக்கியங்கள்