பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

ரோஜா இதழ்கள்

அவன் புதிய படக் கம்பெனியில் பாட்டெழுதி, நூறும் ஆயிரமுமாகச் செக்குகளாகவே கொண்டுவர, காரில் ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் பறக்க, பட்டும் வயிரமும் பச்சையும் மேனியில் மினுமினுக்க, அறுசுவை உண்டியுடன் பாலும் பழமும் உண்டு குளுமையாகச் சிரிக்க... ஏன் அத்தகைய கற்பனைகள் தோன்றவில்லை?

“அப்ப. நான் வரட்டுமாம்மா ? நாலு மணிக்குப் பஸ்ன்னான்...” எங்கே என்றுகூட அவள் கேட்காமல் “சரி மாமா..” என்று விடை கொடுக்கிறாள்.

“மாம்பாக்கம் போகலாமா, நேரே ராத்திரி போட்மெயிலுக்குப் போயிடலாமான்னு பார்க்கறேன். அப்ப, கோயமுத்துார் போனதும் கடிதாசி போடறியா?”

“சரி, மாமா..”

“அட்ரஸ் தெரியுமோல்லியோ?”

மாமா சிரித்துக்கொண்டு கேட்கிறார். “தெரியும் தெரியும்..” என்று தலையை ஆட்டிவிட்டு அவருக்கு விடை கொடுக்கிறாள்.


2

வள் கதவைச் சாத்துமுன் குறுகுறுத்த விழிகளுடன் லட்சுமி சிரித்துக்கொண்டு வருகிறாள். கையில் ஒரு பூவரசங் குச்சி. உருவோ வண்ணமோ தெரியாததொரு பாவாடை. வெற்று மேனி. எண்ணெய் காணாத முடியில் எப்போதோ போட்ட பின்னல். மூக்கிலே பொட்டுப்போல் ஒரு சிவப்பு மூக்குத்தி. பத்து வயசுக்கு மேலிருக்காது. பகல் நேரத்தில் அந்த இடத்தில் இரண்டாடுகளை மேய்த்துக் கொண்டு வரும் அச்சிறுமிதான் மைத்ரேயியின் தனிமையைப் போக்கும் சிநேகிதை. அவள் மைத்ரேயியை நட்புக் கொள்ள வந்தது இப்படித்தான். கொல்லை வாயிற்படியைப் பூவரசங் குச்சியினால் தட்டிக்கொண்டு நின்றாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/20&oldid=1099681" இலிருந்து மீள்விக்கப்பட்டது