பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

ரோஜா இதழ்கள்

அவனைத் தனியே ஏழெட்டு நாட்கள் சந்திக்கச் சென்றாள். அது ஒரு காய்ச்சல் வேகம் போல். எப்படி இருந்தது? காதல் என்று யாருக்குமே கிடைக்காத பேறு தனக்குக் கிடைத்து விட்ட இறுமாப்பில் குன்றேறி நின்றதாக எண்ணினாள். வேலியை மீறுவது ஒரு வீரமிக்க விளையாட்டு என்று அவன் சொல்லிக் கொடுத்த துணிவின் தெம்பில் மிதந்தாள். பள்ளிக்குச் செல்லாமல் மாலைப்பொழுதுகளை அவனுடன் கழித்து விட்டு வீடு திரும்பும்போது அச்சமும் திகிலும் அடி மனசில் ஒளிந்திருந்தாலும் புதிய இன்பம் கண்ட அனுபவத்தில் அந்த அச்சமும் திகிலும்கூட ஒரு இனிமையோடு கூடிய உணர்வுகளாகவே தோன்றின. அடுக்கடுக்காக அவன் காதல் வசனங்களைப் பொழிவான். செவியருகில் வந்து அவள் நெஞ்சம் கிளரும் பாடல்களைப் பாடுவான். அவள் அழகைப் புகழ்ந்து புகழ்ந்து போற்றுவான். ஒரு பேதைப் பெண் வசமாக வேறென்ன வேண்டும்?

“நாம இப்படியே ஓடிப்போய்க் கல்யாணம் செய்து கொள்வோம்...”

“நான் இப்பவே உன்னை...” அவளுக்குப் பேச இடைவெளி அற்றுப் போகும்.

பெரிய நகரமாக இருந்தால் ஒரு மூலையில் நடக்கும் செய்தி இன்னொரு மூலைக்குத் தெரியாது.

தோப்பு பங்களாப் பெண் நாலைந்து நாட்களாகப் பரிட்சையும் எழுதவில்லை. பிறகு பள்ளிக்கும் வரவில்லை என்ற செய்தி அக்காவுக்கும் அத்திம்பேருக்கும் எத்தனை நாட்கள் தெரியாமலிருக்க முடியும்?

அவள் காதலனோடு மகாபலிபுரம் பஸ்ஸில் ஏறிச் சென்றிருந்த அன்றுதான் உமா, அந்த ஒதுக்குப்புறத் தோப்பு வீட்டைத் தேடி வந்து குட்டை உடைத்திருக்கிறாள்.

“மாமி மைத்திரேயிக்கு உடம்பு சுகமில்லையா? அவள் ஸ்கூலுக்கே ஏன் வரலே?” என்று கேட்டாளாம்.

“வரலியா? வழக்கம்போல் தினம்தானே போயிட்டு வரா? இன்னிக்குக்கூடக் காலமேயே போயிட்டாளே?” என்று அக்கா கூறியிருக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/26&oldid=1099694" இலிருந்து மீள்விக்கப்பட்டது