பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

33

ஃபாமிலி அறை.

காய்ந்த வயிறு ஆரவாரம் செய்கிறது.

வாழை இலையில் நீர் தெளித்து, மல்லிகைப்பூப் போல் சாதம்.

அரிசிக்கு யார் யாரோ எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டாலும், சோறு, வெள்ளை வெளேரென்று. கூட்டு, கறி, பச்சடி, அப்பளம், பருப்புப் பொடி, பூண்டுப் பொடி வேறு.

அவர்கள் இருவரும் பேசுவதையோ, கண்ணபிரான் இடை இடையே கடைக்கண்ணால் அவளைப் பார்ப்பதையோ உணராமல் அவள் தன் வயிற்றுப் பசியை ஒழித்துக் கொண்டிருக்கிறாள்.

அவர்கள் கட்சி மாநாட்டைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பது அவ்வப்போது செவியில் விழும் சொற்களிலிருந்து புரிகிறது. கட்சித் தளபதிகளைப் பற்றிப் பேசுகிறார்கள். கட்சியைப் பற்றிய அறிவு அவளுக்கு இல்லாமலில்லை. முன்பு அவள் சிறு வயசில் மாமாவின் ஊருக்குச் சென்றிருந்த போது, அங்கே கோயிலுக்கு முன் கடைத்தெரு சந்தியில் அடிக்கடி பொதுக்கூட்டம் நடப்பதுண்டு. பொதுக்கூட்டம் துவங்குவதற்கு முன்பாக ஒலிபெருக்கியில் பாட்டுப் போடுவார்கள். நேரடியாக எவரேனும் பாடுவதும் வழக்கம்தான். மாமாவின் பிள்ளை நட்டுவுக்கு அப்போது இரண்டு வயசு தானிருக்கும். மாமிக்கு அவனுக்குக் கீழ் இன்னொரு குழந்தை இருந்ததால், நட்டு நோஞ்சானாக எப்போதும் அழுது கொண்டிருப்பான். அவள் நட்டுவையும் தூக்கிக் கொண்டு கோயிலுக்குப் போவதுண்டு. அவன் ஒலிபெருக்கி பாட்டைக் கேட்டால் அழமாட்டான். அந்தப் பாட்டுக்களின் பொருள் அவளை அப்போதெல்லாம் கவர்ந்ததில்லை. ஆனால், மெட்டுக்கள் திரும்பத் திரும்பப் பாடும்படி நன்றாக இருக்கும். பாட்டுக்களைக் கூட்டத்துக்கு முன்னும் பின்னும் கேட்கலாம். அப்படிப் பாட்டுக் கேட்கும் சாக்கில் அவள் பேச்சையும் கேட்க நேர்ந்ததுண்டு.

ரோ.இ - 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/35&oldid=1099714" இலிருந்து மீள்விக்கப்பட்டது