பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

45

நிற்கிறாள் மைத்ரேயி, அந்தப் பட்டுச் சேலையும் ரவிக்கையும் முட்களாய் மாறி உறுத்துகின்றன. பூத்திரி மத்தாப்பூவைக் கொளுத்தி வைக்கோற் போரில் போட்டாற்போல் அறியாக் குழந்தையின் மழலையில் நஞ்சு கலக்கிறார்களே என்று வெதும்புகையில் விருந்துக்கு ஒவ்வொருவராகக் கூடத்தில் வந்து அமருகின்றனர்.

“போம்மா, போய் உட்காரு..."என்று அவளிடம் அம்மணியம்மா கூறுகிறாள்.

“எனக்குப் பசி இல்லே. நான் அப்புறமாச் சாப்பிடறேங்க...” என்று மெதுவான குரலில் கூறிச் கூசி நிற்கிறாள்.

“அட நல்லாத்தானிருக்கு! மணி ஒண்ணரை, இன்னுமா பசியில்லே? வடிவு! தம்பியைக் கூப்பிட்டுச் சொல்லு!”

கொத்துக் கொத்தாக வெள்ளையும் கருப்பும் சிவப்புமான துண்டுகளுமாகக் கூடம் கலகலக்கும் கூட்டத்தில் வடிவு லோலாக்குகள் மின்னச் சிரித்துச் சிரித்துப் பேசு கையில் இந்தச் செய்தி போகிறது.

“ஒ..! அண்ணே ! புதுமாப்பிளை அண்ணே ! அண்ணி யார் நீங்க வந்து கரந்தொட்டு அழைச்சாத்தான் விருந்துண்ண வருவாங்களாம் !...”

அவள் கத்துவதைச் செவியுறும் மைத்ரேயி விடுவிடென்று பின்னும் கேலிக்கூத்துக்காளாகாமல் கூடத்துக்கு வந்துவிடுகிறாள்.

கொல்லென்று படிகிறது அமைதி. சுவரோடு சாய்ந்த மின்னல் கொடி போல் நிற்கும் அவளையே எல்லாரும் பார்க்கின்றனர்.

கருந்திரிகள் போல் என்ணெய்ப் பளபளப்புடன் விளங்கும் முடிகள். நாசூக்கான பூச்சி மீசைகள், முரட்டுத்தனத்தின் வெளியீடுகளாகத் தெரியும் கண்கள். இப்படிச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் அவளுடைய கண்களில் பட்டுக் கருத்தில் படிந்து பீதியைத் தோற்றுவிக்கின்றன.

“தலைப் பக்கத்து இலையில் தம்பி உட்காரட்டும்” என்று கண்ணபிரான் அழைக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/47&oldid=1101049" இலிருந்து மீள்விக்கப்பட்டது