பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

ரோஜா இதழ்கள்

கினாற் போன்ற மூக்கு. தட்டுச் சுற்று வேட்டிக்குமேல் அந்தப் பருத்த உடலுக்கும் தொள தொளப்பாகத் தொய்யும் ஒரு வெள்ளைச் சட்டை. அவளுடைய பார்வை சட்டென்று மறுபடியும் நிலத்துக்கு இறங்குகிறது. அவரும் அவளை அப்படித் தலையோடு கால் பார்த்திருப்பார்.

“வாங்கோ மாமா” என்று சொல்லக்கூட நாவெழாமல் நகர்ந்து வழிகாட்டும் அவளை மறுபேச்சே எழாமல் பார்ப்பதை அவள் அறியாதவள்போல் தலைகுனிய நிற்கிறாள். எங்கோ பனங்காட்டின் நடுவே, ஊரோடு ஒட்டாமல், இப்படிக் குடும்பத்தைவிட்டு ஓடி வந்தவளுக்கென்று முளைத்தாற்போல் இருக்கும் ஓர் பாழடைந்த ஓட்டுக் குடிசை. செங்கற்தளம் மண்பறியக் கால்களில் ஒட்டுகிறது. ஆறடி ஐந்தடி ரேழியைக் கடந்தால் ஒட்டுத் தாழ்வரை முற்றம். தாழ் வரையில் குறுஞ்சுவர். பகுதி சமையலறை. பின்புறம் விரிசல் விழுந்த கிழவியின் முகத்தைப் போன்று வெயிலுக்கும் மழைக்கும் ஈடுகொடுத்துக் கீறல் விழுந்து சிதிலமான கதவு. தாழ்வரையின் ஓரத்தில் இரண்டு பாய்ச் சுருட்டுக்கள் இருக்கின்றன. ஒரு தகரப்பெட்டி. கொடியில் ஒரு வாயில் புடவை, பாவாடை, ரவிக்கை உட்கச்சு எல்லாம் காய்ந்து கொண்டிருக்கின்றன. நரிக்குறத்தியின் தலையைப்போல் பிறந்ததற்குப் பிறகு வெள்ளைக் குளி காணாத சுவரில் ஒரு எட்டணாக் கண்ணாடி தொங்குகிறது. முக்கோணப் புரையில் ஒரு குடிகூராப் பவுடர். ஹாஸ்லைன் ஸ்னோ சீப்பு வகையறா தெரிகின்றன. அட்டையில்லாத தொடர்கதைப் பகுதிகள் போல் ஐந்தாறு புத்தக அடுக்கு பெட்டிக்குப் பக்கத்தில் அவளுடைய பொழுதுபோக்கை விளக்குகின்றன. முற்றத்து வாளி புதியது. தகரடப்பாக் குவளை.

முற்றத்துத் துணோடு சாய்ந்தாற்போல் அவள் நிற்கிறாள்.

“... ம் ... இப்படியாய்ப் போச்சா?” அவரை உட்காருங்கள் என்று சொல்ல அவளுக்கு நா எழவில்லை.

இவர் எப்படி இங்கே தேடிக்கொண்டு வந்தார்? எதற்கு வந்தார்? ஒரு பூ அடுக்கிலிருந்து ஓர் இதழ் விடுபட்டு வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/8&oldid=1123713" இலிருந்து மீள்விக்கப்பட்டது