பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கொண்டு வருவது எதற்கு என்று வினவிய பெருமாட்டி எனது இந்தப் பார்வையே சீதையை ஒரு புதிய வடிவில் இசைக்கிறது. இவள் தன் மவுனத்தால் இராமனைத் தலைகுனியச் செய்கிறாள். அஹிம்சையின் ஆற்றல் சொல்லற்கரியதாகும். கடப்பாரைக்கு நெக்குவிடாத பாறையும் பசுமரத்து வேருக்குப் பிளவுபடும் அன்றோ? சீதையின் ஆற்றல் ஆரவாரமற்றது. அது ஆழத்தில் பாய்ந்து தீமையைச் சுட்டெரிக்கவல்லது என் சீதை இத்தகைய ஆற்றலை அகத்தே கொண்டு வனத்தையே அன்புமயமாக ஆளுகை செய்யும் தாய். அவள் பூமிக்குள் செல்லவில்லை. அவள் மைந்தர்களும் அரசன் பின் செல்லவில்லை.

இந்தப் புனைவு ஏற்கெனவே நிலை நிறுத்தப்பட்ட பிம்பங்களைத் தகர்க்கலாம். அப்படியானால் நான் என் நோக்கில் வெற்றி பெற்றதாகக் கருதுவேன்.

எப்போதும் போல் இந்த “வனதேவியின் மைந்தர்கள்” நூலையும், தாகம் பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள். இடை விடாமல் எனது நூல்களை வெளியிட்டுவரும் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு இந்தப் புதிய முயற்சியை வாசகர் முன் வைக்கிறேன்.


5-5-2001 வணக்கம்

ராஜம் கிருஷ்ணன்