பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வன தேவியின் மைந்தர்கள்


1


பனிக்காலத்து வெயில் உடலுக்கும் உள்ளத்துக்கும் தேனாய், தீஞ்சுவையாய், இங்கிதமளிக்கக் கூடியதுதான். ஆனாலும் பூமகளுக்கு அப்படி ஒர் இனிமை படியவில்லை. மாளிகையின் மேலடுக்குச் சாளரத்தின் சல்லாத் தளிர் விரல்களால் நீக்கி, கீழே மாளிகையின் பின்புறத்தின் விரிந்த சுற்றுச் சூழலில் பார்வையைப் பதிக்கிறாள்.

பனிக்காலத்தில் பசுமை இத்துணை அழகாகத் தென் பட்டதாக நினைவில் வரவில்லை. புல்வெளிகள். பசுங்குவியல்களில் நட்சத்திரம் பதிந்தாற் போன்று பூம்புதர்கள். மாமரங்கள், இந்தா இந்தா என்று கதிரவனுக்குக் காணிக்கையாக்கும் அரும்புக் கொத்துகள். விரிந்து தெரியும் சிவப்பும் நீலமுமான அரவிந்தத் தடாகம். அதில் வெண் மலர்கள் போல் தெரியும் அன்னங்கள்.

எல்லாம் பார்த்துப் பார்த்து, மாளிகையைச் சேர்ந்த உழைப்பாளர் உருவாக்கியிருக்கும் அந்தப்புரத்தோட்டம். எட்டி ஒர் ஆலமரம். அதைச் சுற்றி அழகிய மேடை உண்டு. அங்கே மன்னரும் அவளும் சந்தித்துப் பேசுவதுண்டு. கானகம் செல்லுமுன்பு, அவள் பேதைப்பருவ அறியாமைகள் அகல, மன்னரின் அன்புப் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட இடம். அதை நினைக்கும் போது இப்போது, மெய் சிலிர்க்கிறது. பூம்பட்டு மேலாடையை நழுவாமல் பற்றிக் கொள்கிறாள்.

“தேவி!...”

“உச்சிப் போது தாண்டி நேரமாகி விட்டது. உணவு சித்தமாகி, ஆறிப் போகிறது...”

அவள் திரும்பிப் பார்க்கிறாள். கைகழுவக் கலமும் நீரும் ஏந்தி நிற்கும் பணிப் பெண்.

பணிப்பெண்ணா? முன் நெற்றிக் கூந்தல் நரை பட்டையாகத் தெரிகிறது.