பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

25

நல்ல உடை உடுத்தி, உணவு கொடுத்து நான் மகிழவேண்டும்... நீயோ தவமிருக்கிறாய். ஒரு பெண்ணின் தூய்மை, அவளால் குலைக்கப்படுவதில்லை. ஆணே அதற்குக் காரணம். இந்த மன்னனைச் சேர எத்தனை பெண்களோ விரும்பி வந்திருக்கிறார்கள். ஆனால் மன்னனோ, உன்னை அடைய ஆசைப் படுகிறான். உன்னை அணுகிவிடாதபடி நெருப்பு வளையம் தடுக்கிறது” என்று சொன்னாள். எனக்கு அவள் பெரியம்மைதானோ, ஏதோ ஓர் அசாதாரண சக்தி அவளை என்னிடம் கொண்டு வந்து விட்டிருக்கிறதோ என்று தோன்றும்...

“ஓ! அவள்தான் தம்பி வீடணன் மகளா, குழந்தாய்?”

“இல்லை சுவாமி. அவள் இளையவள். திரிசடை மூன்று பின்னல்கள் போட்டு அழகாக முடிந்திருப்பாள். என் அருகில் வளையம் தாண்டி வரும் ஒரே பெண். அந்த அரக்கர் குலப் பெண்கள் எல்லோருமே அழகானவர்கள்.....” என்று சொல்லி வரும் போது, தாடகை நினைவு வர, வெண்ணெய்க் கனியை அவள் அவருக்கு உண்ணக் கொடுக்க, அவர், வெண்ணெய்க் கனியைப் பிட்டு அங்கையில் வைக்கிறார்.

உணவு கொள்ளல் நீளும் பொழுதில், பணிப் பெண்கள் ஆங்காங்கு கொத்துக் கொத்தாக நிற்பதை அவள் கருத்தில் கொள்ளவில்லை.

“குழந்தாய், பெரியம்மையை நான் கண்டு இந்தச் செய்தியைச் சொன்னால் பேரானந்தமடைவாள்..”

“சுவாமி, நீங்கள் சொல்வீர்கள், குரு சத்திய முனிவர்பற்றி, அவர்தாம் என் தந்தையை அந்த வனத்தில் உழவு செய்ய அழைத்தார், ஏரோட்டுகையில் நான் கிடைத்தேன் என்று. எனக்கு அந்த இடம், அந்த முனிவரின் ஆசிரமம் எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசை. எங்கெங்கோ கானகங்களில் சென்று வாழ்ந்தோம். கடல் கடந்தும் பாவியானேன். ஆனால் எனக்குப் பிறவி கொடுத்த தாய் மண்ணை இன்னமும் தரிசிக்கவில்லையே?..”