பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

27

படுத்தும் அமைதி முறையில் அவருக்கு அளவில்லாத நம்பிக்கை... மகளே, நான் முன்பே தீர்த்த யாத்திரை என்று கிளம்பி இமயத்தின் அடிவரையிலே தங்கிவிட்டேன்... இப்போது எனக்கு விடை கொடு, நான் சென்று செய்தி சொல்வேன். உன்னையும் மன்னரையும் அழைத்துச் செல்ல வருவேன்... இதைவிட எங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி... பணி என்ன இருக்கிறது?”

“சுவாமி! நீங்கள் இப்படித் தோட்டத்தில் வந்துவிட்டு மன்னரைக் காணாமல் மரியாதைக்குரியவரை வரவேற்கும் பண்பை எனக்கு மறுத்து விட்டுப் போகலாமா? அந்நாட்களில் நான் விவரம் புரியாத சிறுமி; தந்தை என்னிடம் தங்களை உள்ளே அவைக்கு அழைத்து வரச் சொல்வார். எனக்கு அந்த அவை நாகரிகம் எதுவும் பிடிக்காது. தங்களுடன் அணில்களைத் தொட்டுப் பார்ப்பதும் கிளிகளுடன் கொஞ்சிப் பேசவும், புறாக்கள் வரும் அழகைப் பார்த்து ரசிக்கவும் கற்றேன். ஒரு சமயம் பெரிய பாம்பைத் தொட்டுத் தடவிக் கொடுக்கச் சொன்னீர்கள். மகளே, அச்சம் கூடாது. அதற்கும் அச்சம், உன்னிடம் வராது... என்றீர்கள். தடவிக் கொடுத்தேன். குளிர்ந்திருந்தது. பிறகு கூட ஓடிப் போகாமல் நாம் பேசுவதை, பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தது. எனக்கு அதனால்தானோ போலும் வனவாசம் என்ற அச்சமே இல்லை.”

“உன் நண்பரை உள்ளே அழைத்து வர வேண்டாமா மகளே? உள்ளே அழைத்து உபசரிக்க வேண்டாம்?” என்று தந்தை நம் இருவரையும் கண்டபோது மொழிந்தார். நீங்கள் சிரித்துக் கொண்டே, உபசாரமா? இவளே இந்தக் குழந்தையே என் தாய். இதைவிட என்ன உபசாரம் என்றீர்கள், நினைவு இருக்கிறதா, சுவாமி?”

“குழந்தாய், நான் கற்ற அறிவாளி அல்ல... கவிபாடும் குரவரும் அல்ல. எனக்கு எந்த நாகரிகமும் தெரியாது. ஒரு காட்டு மனிதன். இந்த வாழ்வுப் பிச்சையே எனக்கு ஒரு தாயின் அருளால் வாய்த்தது. அந்த வடிவத்தை இந்தத் தாய் குழந்தை உருவில்