பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

43

உறுத்துப் பார்க்கும் அவந்திகா, “மன்னர் உன்னிடம் சொல்லி அனுப்பினாரா? மன்னருக்குக் கவரிபோடச் சென்றாயா என்று சொற்களைக் கடித்துத் துப்புகிறாள்.

“... ஐயோ இல்லையம்மா, பெரிய மகாராணியார் சொல்லி அனுப்பினார். நான் ஏன் அங்கெல்லாம் போகிறேன்?..”

“சரி போ...”

பூமகள் அவள் செல்லும் திசையையே நோக்குகிறாள்.

“மன்னருக்கு, மனைவியை வந்து நேரில் மாளிகையில் பார்க்க முடியவில்லையா? இந்த ஏற்பாடு மகாராணியால் செய்யப் பட்டதா? மன்னருக்குச் சுயசிந்தனை இல்லையா? சடாமுடி குலகுருவோ, வேறு யாரோ சொன்னால் மட்டுமே கைபிடித்த மனையாளைப் பார்க்க - செண்பகத்தோட்டத்துக்கு வர வேண்டுமா?”

இவள் மனசுக்குள் கேட்டுக் கொண்ட வினாக்களுக்கு எதிரொலியே போல், அவந்திகா, “மகாராணி மாதா, மகன் இந்த மாளிகைக்கு வரவேண்டாம் என்று நினைக்கிறாரா?” என்று கேட்டுக் கொண்டே சிக்கெடுத்த முடியை விரலில் சுற்றிக் கொள்கிறாள்.

“அதில்லை, செண்பகத்தோட்டம், குளக்கரை, அதன் மீன்கள், அன்னப்பறவைகள், அவருக்கு மனங்கவர்ந்த இடங்கள். அதனால் நேராக வந்து அங்கே மகிழ்ந்திருக்கலாம் என்று எண்ணுவாராக இருக்கும். எது எப்படியானலும் நாம் செய்குளத்துக்குப் போகிறோம். அங்குதான் நீராடல். அங்கே இப்போது நீர் வெதவெதப்பாக உடலுக்கு இதமாக இருக்கும்... அவந்திகா, வேதபுரி பக்கம் இப்படி வெந்நீர்க் குளங்கள். யட்சவனத்தில் பக்கத்தில் பக்கத்தில் வெந்நீருற்றும், குளிரருவியும் இருக்கும் அதிசயம் அற்புதம்...”

“இங்கும் கோமுகி ஊற்று இருக்கிறதாம். மூன்று ஊற்றுகளில் நீராட வசதி இருக்குமாம்.”