பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

இயலாதவர்களாகவே உட்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே குலம் கோத்திரம் அறியாதவர்கள். தந்தை வழி முத்திரைக்கு அப்பால் உதித்தவர்கள். பெண் குழந்தைகள் அரச மாளிகைகளில், பிரபுக்களின் மேல் வருணத்தாரின் மனைகளில், கணிகையர் விடுதிகளில், உல்லாசம் அநுபவிக்கக்கூடிய பொது இடங்களில் ஊழியம் செய்ய விலைப்படுத்தப்பட்டனர். அரசர்கள், மேல்வருண ருஷி முனிவர்களுக்கு இந்தப் பெண்களை, பசுக்களையும் பொன்னையும் வழங்குவதுபோல், தானமாக வழங்கினர். இத்தகைய அடிமைகளின் தொடர்பினால் உயர் வருண ருஷித் தந்தைக்கு மகன்கள் உண்டானால், அவர்கள் ஏற்றம் பெறுவதும் இருந்தது. ஆனால் இந்த ஆண்மக்களும் பெரும்பாலும் உபநயனம் பெறும் உரிமை இல்லாதவராகவே இருந்தனர் என்றே தெரிய வருகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பெண் பிறந்துவிட்டால், அவள் அடிமை என்றே விதிக்கப் பெற்றாள். அழகிய பெண்ணாக இருந்து விட்டால், மன்னர்களும், பிரபுக்களும் அந்தப்புரக் கிளிகளாகக் கொள்வர். அவர்களில் எவருக்கேனும் ஒரு வாரிசு உதயமாகும் என்ற நிலையை எய்தினால் போட்டி, பொறாமையில் அவள் சுருண்டு போவாள். சந்ததியைப் பெற்றுத் தர இயலாத பட்ட மகிஷிகளின் ஆணைகள் அந்தப் பேதைப் பெண்ணைக் காட்டுக்கு அனுப்பவும் செய்தன. அந்த வாரிசு உண்மையில் மன்னருடையதாக இல்லாமல் மன்னர் குடும்பத் தொடர்புடையவருடைய சந்ததியாக இருந்தாலும்கூட, அவள் மன்னருக்குரிய அந்தப்புரத்தில் இருந்த குற்றத்துக்காக நாடு கடத்தப்படுவாள்.

தசரத மன்னர், நூற்றுக்கணக்கான அந்தப்புரப் பெண்களை ‘ஆண்டு’ வந்தார். அவர் இறந்தபோது, அத்தனை மனைவியரும் கதறித் துடித்தனர் என்ற செய்தி வருகிறது. ‘பட்ட மகிஷி’களான தேவியருக்கும் சந்ததி உருவாகவில்லை. எனினும் மன்னனின் ‘ஆண்மை’ குறித்த கரும்புள்ளி எந்த இடததிலும் வரவில்லை. மாறாக, ‘யாகம்’ என்ற சடங்கும், ‘யாக புருடன்’ வேள்வித் தீயில் தோன்றி, பாயசம் கொணர்ந்து தேவியர் பருகச் செய்தான் என்ற மாயப்புதிரும் புனையப் பெறுகிறது. மிதிலாபுரி மன்னருக்குப் பெண் சந்ததி இருந்தது. அந்த மன்னரின் அந்தப்புரக் கிளி ஒருத்தி