பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

கருவுற்றதும், அவள் சந்ததியைத் தந்துவிடக்கூடுமோ என்ற அச்சத்தில் மற்றவர்களால் கானகத்துக்கு அனுப்பப் பெறுகிறாள். அந்தத் தாயின் மகன் வழித் தோன்றலாக வந்த பெண் குழந்தையை அந்த அன்னையே, அரசன் ஏரோட்டும் பூமியில் பொதித்து வைத்தாள் என்று நான் கற்பனை செய்தேன். சத்திய வேள்வி இச்செய்திகளைக் கொண்ட நவீனம்.

அதே பூமகள், இராமசந்திரனின் கரம் பற்றிய நாயகியானபின், தொடரும் வரலாறே, இந்தப் புனைவு. இவள் இராம கதையின் நாயகியாகும் வகையில், இராமசந்திரனின் கல்யாண குணங்களை மிகச்சிறப்பாக ஒளிரச் செய்யும் வகையில், பொற்கூட்டுப் பின்புலமாக உருவாக்கப் பெற்றிருக்கிறாள். இந்தப் பின்புலம், கரும்புள்ளிகள் உள்ள வயிரத்தையும், தன்னுள் அப்புள்ளிகளை ஏற்று விழுங்கி, அந்த வயிர மணிக்கு மேலும் கண்பறிக்கும் வண்ண ஒளிக் கதிர்களைக் கூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வகையில் இந்தக் காவியம், சீதையின் கதையாகவே விரிந்தாலும், இது இராமாயணம் என்றே சிறப்பிக்கப்படுகிறது.

‘குலம் கோத்திரம்’ அறியாத இந்தப் பெண்ணுக்கு, எந்த வகையில் உரிய மணவாளனைத் தேட முடியும் என்று சனகமன்னன் கவலைப்பட்டிருக்கிறான். வில் இங்கே ஒரு காரணமாக அமைகிறது. வில் உடைந்தது. நாயகன் கிடைத்தான். குலம் கோத்திரம் கேட்காமல், மன்னனின் வளர்ப்பு மகளை, பேரழகும் பொறுமையுமே வடிவாகத் திகழ்ந்த கன்னியைக் கைபிடித்தான். அவள் நாயகனுடன் செல்லும்போது, வழியனுப்பி வைக்கும் தந்தை, தான் கவலைப்பட்டதையும், அது ஆதவனைக் கண்ட பனியாகக் கரைந்து ஒர் ஒப்பற்ற அரசகுமாரனை மருகராகக் கிடைக்கப் பெற்றதையும் எடுத்துரைத்து, “மகளே, உன்னை ஒர் உயரிய நாயகருக்கு உரித்தாக்கி விட்டேன். இனி இந்த நாயகரே உனக்கு எல்லாமும் ‘அன்னை, தந்தை, குரு, தெய்வம்’ எல்லாமுமாக ஆகிறார். இவர் இருக்குமிடமே உனக்கு உரிய இடம்” என்று உரைத்து ஆசி வழங்குகிறார்.