பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

வெளியே வந்த நாயகியை கருவுற்ற செல்வியை, மீண்டும் உயிருடன் கொளுத்தும் துரோகச் செயல் அல்லவோ? இந்தச் செயலின் பின்னே கற்பிக்கப்படும் தொத்தல் நியாயத்தை யாரால் ஏற்க முடியும்?

இப்படி ஒரு நிகழ்வு, ஆதிகவியின் இதிகாசத்தில் இடம்பெற வேண்டுமா? ஆதிகவியின் நோக்கம் யாதாக இருக்க முடியும்?

தமிழ்க் காவியத்தைக் கம்பன் ஆதிகவியை ஒட்டியே புனைந்தாலும், மகுடாபிஷேகத்துடன் கதையை முடித்துக் கொண்டது அரிய சிறப்பாகும்.

இராமனுடைய அரசில் ஒர் ஆண் சலவைத் தொழிலாளியின் பேச்சுக்குக் கூட இத்துணை கனம் உண்டு; அந்தப் பளு நிறைசூலியை நிராதரவாக வனத்துக்கு அனுப்புமளவுக்கு நாயகனின் மனச்சான்றை அழித்துவிடும் வலிமை வாய்ந்தது என்பது விளக்கமாகிறது. இந்த நீதிதருமம், சாதாரணமான மக்கள் எவரும் புரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை.

வால்மீகி மகரிஷி இந்த மகா காவியத்தை இயற்றியதன் நோக்கம் யாதாக இருக்கும் என்பதைக்கூடத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. கிரௌஞ்ச பட்சிகளில் ஆணை வேடன் கொன்றான்; பெண் சோகம் தாங்காமல் கதறியது. இந்தச் சோகத்தைக் கண்டதும் மனம் தாளாமல் அவர் வேடனைச் சுடு சொற்கள் கொண்டு சபித்தார். அப்போது வெளி வந்த அந்த சுலோகமே இவருடைய கவித்துவத்திற்கான தோற்றுவாய் என்று சொல்லப்படுகிறது.

பெண் பட்சியின் துயரம் சீதையின் துயராக மாற்றப் படுகிறதா? ஆனால், அது இயல்பாக இல்லையே?

பெண் துயரப்படுவதற்கே பிறக்கிறாள். ஆனால் ஆண் மகிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை அல்லவோ இந்தக் காவியம் எதிரொலிக்கிறது? இன்னும் நுட்பமாக நோக்கினால், ஆண் நாயகன், ஒர் இலட்சிய மாதிரியாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும் புலப்படுகிறது. பாரதத்தில் வரும் கண்ணனைப் போல் இவன் மூன்றாம் வருணத்தவன் அல்ல;