பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

வருங்கால மானிட சமுதாயம்


பிரிந்துவிட்டன, "புதிய ஒற்றுமை"யிலேயே எந்த வகையான ஒருமித்த கருத்தும் இல்லை; 1828ஆம் ஆண்டில் ஓவென் தோல்வியை ஒப்புக்கொள்ள நேர்ந்தது. ஆனால் அதற்கு மூன்றாண்டுகட்டு முன்னர்தான் அவர் வாசிங்டனில் பேசியபோது, "புதிய ஒற்றுமை" ஒரு புதிய காலத்தின் தொடக்கம் என்று கூறினார்; அதன் பட்டறிவானது அறிவாளிகளின் சிந்தையையும் அனைத்து அரசாங்கங்களையும் தெளியவைக்கும் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.

"இக்கேரியன்" பொதுவுடைமை வரலாறோ முற்றிலும் துயரமாக முடிந்தது.

1840ஆம் ஆண்டில் பாரீசு நகரில் எட்டியென்னி கேபட் என்பவர் இக்கேரியாவுக்கு உலா என்ற தமது "மெய்யியல், சமுதாய" நாவலை வெளியிட்டார். தொன்மக்கதையில் வரும் இக்கேரசு தன் தந்தை தாடலக தனக்கென உண்டாக்கிக் கொடுத்த இறக்கைகளின் உதவியால் கிரீட் இலாபிரிந்த்திலிருந்து பறந்து செல்கிறான். பொதுவுடைமை அடிப்படையில் உருவாக்கப்பட்டதொரு உரிமைச் சமுதாய வடிவத்தை வடித்தெடுத்துக் காட்ட இந்தக் கற்பனைக் கோட்டுக்கு உதவியது.

கேபெட் இக்கேரசின் இறப்பையும் எண்ணிப் பார்த்திருக்கவேண்டும். அடிமைத்தனம் மேலாதிக்கம் செலுத்தும்போது எவரும் உரிமையாக இருக்கமுடியாது. "புதிய ஒற்றுமை"யைப் பற்றிய கதையை ஓவெனிடமிருந்தே கேட்டுத்தெரிந்து கொண்ட கேபட் அதன் தீவினையான பட்டறிவையும் கருதிப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் ஓவெனை நேரில் காணுவதற்கென்றே கேபட் லண்டனுக்குப் புறப்பட்டுப் போன காலத்தில், ஒருவேளை ஓவென் அவருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசினாரோ என்னவோ?