பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

41


முழுமையாக முன் கூட்டியே சிந்தனை செய்யப்பட்டு விட்ட ஒன்றாகும் என்ற வரலாறு பற்றிய கருத்தினை மறுத்தார்.

விக்கோவுக்குப் பின்னர் 18ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவ அறிவியக்க வாணர்கள் அனைத்து சமுதாய நிறுவனங்களையும் "பகுத்தறிவால் ஆய்வு" செய்யப் படவேண்டுமென அறைகூவல் விடுத்தனர். அவை அறிவுக்குப் பொருந்தாதவை எனக் கண்டனர்; எனவே பழைய நிலக் கிழார்வ உறவுகளுக்கு மாற்றாக முதலாளிய உறவுகள் இடம் பெற வேண்டுமெனக் கோரினர். மாந்த அறிவும் நல்லொழுக்க நெறிகளுமே உலகத்தை மாற்றியமைக்கும் தன்மை படைத்தவை எனக் கருதி வந்த 19ஆம் நூற்றாண்டின் சமன்மைகளின் மனமயக்கங்களை யெல்லாம், மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத முதலாளிய புரட்சியின் விளைவுகளும், "இல்லாத இடங்"களாகவே இருந்து வந்த 16 - 18 நூற்றாண்டுகளின் எண்ணிறந்த உட்டோப்பியாக்களும் போக்கியிருக்க வேண்டும் என்றே கருதத் தோன்றும். ஆனால் சமன்மை சமுதாய மாற்றத்தைக் கொண்டு வரும் ஆற்றலைப் படைத்த காலம் அதற்குள் பிறப்பித்துவிட வில்லை. எனவே மனித அறிவு, மனித இயல்பு ஆகிய "நிலையான" தன்மைகளையே சிந்தனையாளர்கள் அப்போதும் நம்பி வந்தனர்.

தீவினை காரணமாக வரலாற்றுக்கு அப்பாற்பட்டு விளங்கும் "மனித இயல்பு", மனித அறிவின் கூர்மையான தேவைகள், இனங்களைக் கடந்து நிற்கும் தூய இயற்கையான நல்லொழுக்கம் என்றெல்லாம் எதுவும் கிடையாது.

கடந்த காலத்தில் சமன்மை, பொதுவுடைமைக் கொள்கைகளின் உட்டோப்பியன் தன்மையைத் தெள்ளத் தெளிவாக்குவதில் இணை பிரிக்க வொண்ணாத இரு