பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இதோ! கடல் : நான் ஆழ் கடலில் மூழ்கி முத்தெடுக்கத்
துணிந்து விட்டேன். ஆழமான இக்கடலில் குதிக்கத் துணிந்து
விட்டேன். கரையில் நின்று கொண்டு, நீ இறந்து விடுவாய்
எனக்கதறும் கோழைகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை.
என்னிடம் உள்ளது காண்டீபம். அது வேறொன்றுமல்ல
எனது கவிதை வரையப்பட்ட ஏடுதான்! இந்த வில்லிலிருந்து
புறப்படும் சொற்கணைகள் மூடர் மனத்திலே உலாவரும்
மூர்க்கப் புலிகளைச் சங்கரிக்கும்".

இப்படியெல்லாம் சொல்லி வந்தவற்றுக்கு முத்தாய்ப்பாக நான்கே வரிகளில் துணிவுமிக்க ஒரு மாவீரனாக மாறி விடுகிறார் கவிஞர்.

தீட்டி வீசிடும் கத்திக் கெதிர் செலின்
தீமை நேரும் என்றுள்ளம் உணரினும்
நாட்டு நன்மையைக் கோரி யழைத்திடின்
நகை முகத்துடன் தாங்கத் துணிகிறேன்.

இந்த அருமையான கவிதையை, கவிஞர் வேமா முதலிய நண்பர்கள் அடிக்கடி சொல்லி மகிழ்வதுண்டு. டாக்டர் சாலை இளந்திரையன் அவர்கள் இக் கவிதையை உருது மொழியாக்கம் செய்வித்து உருது மாத இதழில் வெளியிடச் செய்தார். இவரது முதல் கவிதைத் தொகுப்பான இனிய கவி வண்டு ஒரு அற்புதமான கவிதைப் பூக்காடு. சமுதாய மாற்றத்தை வரவேற்கும் கவிதைகளால் மலர்ந்தது அது.

இது புதுக்கவிதையின் ஆட்சிக்காலம். இன்று அரசியலில் ஆட்சியிலுள்ளவர்கள் கூட அறிஞர்களை வணங்கி ஆசிபெறல் சாதாரண நிகழ்ச்சி. அம் முறையில் இன்றைய கவிஞர்கள், கவிஞர் வெள்ளியங்காட்டான் போன்றவர்களைப் புரிந்து கொள்வது நல்லது. எங்கோ தனியாக ஓடிக்கொண்டிருக்கும் இனிய நீர் கொண்ட சிற்றாறுபோல, கொதிக்கும் வெயிலில் குடை விரித்து விசிறும் ஒரு சுயம் போலக் கவிஞர் வெள்ளியங்காட்டான் விளங்குகிறார். இவரிடம் புல்லும் கதை சொல்லும். நெல்லும் பேசும். ஆலமரமும் அங்கு வரும் காற்றும், சித்திரை வெயிலும், ஐப்பசி மழையும் கூட நமக்கு அறிவுரை கூறும்.

31