பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவ்வண்ணமே வாழ்ந்தும் காட்டினார். அவரது காலத்தவராகிய நாம், அவரது கொள்கைகளைக் கடைப்பிடிக்காது வாழ்ந்தோமே -யானால் நம்மை யாரோடு ஒப்பிடுவது? கொலைகாரன் கோட்சேவோடு ஒப்பிட்டாலும் சரியாக ஒப்பிடுவதாகாது. ஏனெனில், அவரது கொள்கைகளைக் கொன்று வாழ்ந்த நம்மைக் காட்டிலும் கோட்சே ஒரு காலத்தில் உயர்வாக மதிக்கப்பட்டு விடலாம்! " என கொள்கைப் பிடிப்புள்ள ஒரு கவிஞன் தன்னை ஒரு கொலைகாரனோடு கூட ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும் போலும்.

       "நான் ஒரு கவிஞன் - அதனால்
       நான் ஓர் அந்நியன்"
என்றார் கிப்ரான்.
       “இலட்சியத்திற்காக உயிர் கொடு
       மண்ணுக்காக அல்ல'
       என்றார் ஒரு மராட்டிய கவி.

தான் பிறந்தநாட்டில் அந்நியனாகி, இலட்சியத்திற்காகவே உயிர் கொடுத்த என் தந்தை......... வயிறு நிறையாத போதும், மனம் விரும்பி நேசித்த காதலியைப் போல், தமிழை- தமிழ்நாட்டை - நெகிழ்ந்து, நிறைந்து அனைத்துக் கொண்ட என் தந்தை-

இறைவா! எனக்கு என் தந்தை வேண்டும். அவரிடமிருந்த வறுமை வேண்டும். அது ஒரு மிகச் சிறந்த பள்ளி. அங்குத்தான் அற்புதமான பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும். எழுத்தாளர்களுக்கே வறுமைதான் மூலதனம். அதிலிருந்து பெருகும் ஜீவநதியே எழுத்தின் உயிர்நாடி அந்த அனுபவமே அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தை. அதன் அழகும், அறிவும், ஆழமும் வறுமை கொடுத்த நன்கொடையே.

நான் ஒரு முட்டாள் ! அருமையான தந்தையைப் பெற்றேன். அவர் இதயத்தோடு உறவாடும் வாய்ப்பைத் தவற விட்டேன். அதன் சத்துக்களை, அளவு கடந்த ஆற்றலை, துணிவை, அறிவைப் பெறும்-

46