பக்கம்:வேமனர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பம் பெருகி வளனுடன் திகழும்; விரைவில் அஃது ஒர் அரசாக வளர்ந்து தலைசிறந்த முறையில் ஆட்சிபுரியும். அலியா ரெட்டி இந்த இரண்டு நிபந்தனைகட்கும் கட்டுப்படுவதற்கு உடனே இசைந்தார். அடுத்த நாளே வேமரின் உருவச்சிலையைப் பொன்னால் அமைப்பதற்குப் பொற்கொல்லர்களை நியமித்தார். சின்னாட்குப் பின்னர் ஒரு நன்னாளில் பகட்டான பெருவிழா எடுத்து அந்தச் சிலையைத் தம்முடைய குடும்பத் திருவிடத்தில் பிரதிட்டை செய்தார்; அப்பொழுது தப்பிப் பிழைத்திருந்த புரோலயாரெட்டி என்ற தன்னுடைய மகனின் பெயரை புரோலயா வேமா ரெட்டி என்ற பெயராக மாற்றினர்.

அந்தநாள்தொட்டுக் கோமட்டிவேமரின் ஆவி உருவம் அலியா ரெட்டிக்குத் தொல்லை தருவதை நிறுத்திக்கொண்டது. அதற்குப் பிறகு இரண்டு குமாரர்களை அவர் அடைந்தார். அவர்கட்கும் முறையே அனவோத்த வேமர் ரெட்டி என்றும் அனவேமாரெட்டி என்றும் பெயர்களை இட்டார். மீண்டும் அவருக்கு மகிழ்ச்சிகரமான வாழ்க்கை கிட்டியது. மகிழ்ச்சியற்ற நினைவுகளுடன்கூடிய பழைய சுற்றுப்புறங்களைத் தவிர்க்கலாம் என்ற நோக்கத்துடன் தான் புதியதோர் இடத்தில் குடிபுகுவது நன்று எனக் கருதினார். தன்னுடைய குடும்பத்துடனும் விலைமதிக்க முடியாத புருடவேதியடங்கியகுடங்களுடனும் கி.பி.1323-இல் குண்டுர் மாவட்டத்திலுள்ள 'கொண்ட வீடு' என்ற சிறியதொரு நகருக்குக் குடியேறினார்.

கொண்டவீடு சென்று அங்கு அமர்ந்தபிறகு ஓரிரண்டு ஆண்டுகளில் அலியாரெட்டி விண்ணுலகெய்தினார். காலதேவன் அவரை ஆட்கொண்டதற்கு முன்னரே புரோலய வேமர் என்ற அவருடைய திருக்குமாரரைக் கருவிலே திருவுடைய அரசனாகக் கண்டு மகிழ்ந்தார். புருடவேதியையும் அதனால் பெற்ற பொன்னையும் தாராளமாகப் பயன்படுத்திப் புரோலயவேமர் கொண்ட வீட்டினைச் சுற்றி அரண்களை அமைத்தார்; படைகளைத் திரட்டினார்; அண்டைநிலப் பகுதிகளை வென்றார், காகதீயப் பேரரசு சிதறியதால் ஏற்பட்ட வன்மையற்ற நிலையைப் பயன்படுத்திக்கொண்டு தானே கி.பி.1328-இல் சுயேச்சையுள்ள முடியரசராகப் பறையறைவித்துக்கொண்டார்.

பன்னிரெண்டாண்டுகட்குப் பிறகு புரோலய வேமர் விண்ணாடு புக்கார்; அவருடைய தம்பி அனவோத்த வேமா ரெட்டி அரியாசனத்திலமர்ந்தார். அஞ்சாநெஞ்சினையும் விடாமுயற்சியையும் கொண்ட இவர் பல போர்களை நிகழ்த்தி ஆட்சிப்பரப்பை இரு மடங்காக்கிக் கொண்டார். ஆனால் அவர் அடிக்கடி மேற்கொண்ட போர் நடவடிக்கைகளால் அரசுக் கருவூலம் செலவழிந்துவிட்டது. இந்த

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/29&oldid=1244245" இலிருந்து மீள்விக்கப்பட்டது