பக்கம்:வேமனர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேமனரைப்பற்றித் தம் ஆய்வு மனத்தைச் செலுத்திய முதல் தெலுங்கு ஆராய்ச்சிப் புலவர் கே. வி. இலக்குமணராவ் என்பவராகும். ஆந்திரத்தில் வரலாற்றுத் துறையிலும் இலக்கியத் துறையிலும் ஆராய்ச்சி முன்னவராக இருந்தவர் இவர்தான் என்று சொல்லலாம். இவர் காட்டிய நெறியைப் பின்பற்றி மற்றும் சிலரும் வேமனரைப்பற்றி அக்கறை கொண்டனர். இவர்களுள் வங்கூரி சுப்பாராவ், இரால்லபள்ளி அனந்தகிருஷ்ணசர்மா, சேஷாத்திரி ரமணகவுலு என்ற இரட்டைக் கவிஞர்கள், வேட்டுரி பிரபாகர சாஸ்திரி, பண்டாருதம்மய்யா, சங்கந்தி சேஷய்யா, வேதம் வேங்கடகிருஷ்ண சர்மா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் எல்லோருமே தம்மால் இயன்றதை மிக நன்றாகச் செய்தனர். ஆனால் வேமனரின் வாழ்க்கை வரலாற்றினைச் சூழ்ந்துள்ள இருட்படலத்தைப் போக்குவதற்கு அவர்கள் ஏற்றிய விளக்குகள் "மந்தமாகவும் நம்பமுடியாதவையாகவும்" இருந்தன. அவர்கள் தமக்குள் வேமனரை ஆந்திரம் முழுவதிலும் பிறந்தவராகவும் பதினைந்தாவது முதல் பதினெட்டாவது நூற்றாண்டுகளில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இருந்தவராகவும் செய்தனர்!

இதுகாறும் வேமனரைப்பற்றிப் பகுத்தறிவுப் பாங்குடனும் அறிவியல் மனப்பான்மையுடனும் விரிவாக ஆராய்ச்சி செய்த தெலுங்குப் புலவர்கள் வங்கூரி சுப்பாராவ் இரால்லபள்ளி அனந்த கிருஷ்ணசர்மா ஆகிய இருவர் ஆவர். இவர்களுள் முன்னர்க் குறிப்பிட்டவர் ஆராய்ச்சியுடன் பொருந்திய வேமனரின் வாழ்க்கை வரலாற்றைக் கி. பி. 1922இல் வெளியிட்டார்; பின்னர்க் குறிப்பிட்டவர் "சர் இரகுபதி வேங்கட்டரத்தினம் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளு"க்குரிய பொருளாக வேமனரைத் தேர்ந்தெடுத்துக் கி. பி. 1928இல் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் ஆதரவின்கீழ் அப்பொழிவுகளை ஆற்றினர். வேமனரைப்பற்றி எல்லா எழுத்தாளர்களுள் இந்த இரண்டுபேர்கள்தாம் பல்வேறு செய்திகளில், குறிப்பாக வேமனரின் காலத்தைப்பற்றியவற்றில், அறிவுக் கூர்மையுடன் மோதிக் கொள்ளுகின்றனர்!

வங்கரியாரின் கருத்துப்படி வேமனர் பதினைந்தாவது நூற்றாண்டின் முற்பகுதியில் பிறந்தவர். அவர் சீநாதருக்கு இளையவர்களாக அவர் காலத்தில் வாழ்ந்தவர்களுள் ஒருவராவார். தம்முடைய முடிவுகளுக்கு இலக்குமணராவின் ஆதரவை உரிமையாகக் கொள்ளுகின்றனர் வங்கூரியார். வேறு இடைக்காலப் புலவர்கள் வேமனரைப்பற்றிக் காட்டியுள்ள சில மேற்கோள்களை இவர் அதிகமாகப் பயன்படுத்துகின்றார். இந்தச் சான்று அதிகமாக ஆதரவு அளிப்பதாக இல்லை. நாம் ஏற்கெனவே பார்த்தவாறு இந்த நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டின் இடையிலிருந்துதான்

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/41&oldid=1243363" இலிருந்து மீள்விக்கப்பட்டது