பக்கம்:வைணமும் தமிழும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

வைணவமும் தமிழும்



‘கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண‌ நந்நாள்’[1]

இந்த மேற்கோள்களிலிருந்து (i) மாயோனது கொடி கருடக்கொடி என்றும் (ii) அவன் காப்புக் கடவுள் என்றும், (iii) திருமார்பகத்தே திருமறுவை (ஸ்ரீ வத்சம்) அணிந்த கடல் நீர் வண்ணன் என்றும் (iv) திருவெஃகாவில் (காஞ்சியில்) கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பவன் என்றும், (v) அங்குப் பாம்புப் படுக்கையில் சயனத் திருக்கோலமாகக் காட்சி அளிக்கின்றான் என்றும், (vi) நான்கு முகத்தையுடைய ஒருவனைப் பெற்ற திருவுந்தியையுடையவன் என்றும், திருவாழியையும் திருச்சங்கையும் தன் கைகளில் தாங்கியவன் என்றும், (vii) மாவலியிடம் மூவடி மண் வேண்டிச் சென்று கேட்டபொருளை நீர் வார்த்துக்கொடுக்க, பேருருவங்கொண்டு காட்சி அளித்தவன் என்றும், (viii) அவுணர்களை அழித்தவனும் மாமை (கருமை) நிறமுடையோனுமாகிய அவன் பிறந்த நாள் திருவோணம் என்றும் அறியப் பெறும் செய்திகளாகும். இவையேயன்றி திருமால் கண்ணனாக அவதாரம் செய்து ஆயர்பாடியில் ஆய்ச்சியர் மருங்கு புரிந்த பல்வேறு செய்திகள் குறிக்கப் பெறவில்லை.

3. எட்டுத்தொகை

எட்டுத் தொகை நூல்களில் (அ) பரிபாடலில்[2] இப்போதுள்ள பதிப்பில் திருமாலுக்குரியவையாக ஆறு பாடல்களும் (1,2,3,4,13,15) பரிபாடல் திரட்டில் ஒன்றும் ஆக ஏழு பாடல்கள் உள்ளன.


  1. மதுரைக் (591-92)
  2. இந்நூல் கி.பிக்குச் சற்று முந்தியது என்று சிலரும் கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது எனச் சிலரும் கூறுவர்.