பக்கம்:வைணமும் தமிழும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வைணவமும் தமிழும்



கிருட்டினாவதாரத்தில் துரியோதனனிடம் “படை எடேன் அமரில் எனப் பணித்ததை" மீறி வீடுமனின் விருப்பிற்கிணங்க அவன் நடத்திய போரில் 'ஆனதெனக்கினியாக எனத் தனியாழி எடுத்தமையும் பொய்யே அறியா' தருமனை 'அசுவத்தாமன் என்னும் யானை இறந்தது' எனத் துரியோதனன் செவிபடச் சொல்லச் செய்து அதற்குத் துரியோதனன் வேறு பொருள் கொள்ளுமாறு மயங்கச் செய்தமையும், பிறந்த பொழுதே இறந்த நிலையில் இருந்த பரீட்சித்து, பெண்களை நோக்காத பேராண்மையையுடைய ஒருவன் திருவடியால் உய்வான் எனக் கண்ணபிரான் உரைக்க, அந்நிலையில் யாவரும் முன் வராமை கண்டு ‘யானே பெண்களை நோக்காதவன்' எனத் தன் திருவடியைப் பதிய வைத்து அவனைப் பிழைக்கச் செய்தமையும் முதலிய வரலாறுகளை மனத்திற் கொண்டே,

வாய்மை எனப்படுவதி யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல் (291)

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். (292)

என்ற திருக்குறளைக் கூறினர் எனக் கருதலாம். 'புரை தீர்ந்த நன்மையைப் பொய்மை பயவாது, அங்ஙனம் பயக்கின்ற அப்பொய்மையும் வாய்மை இடத்த’ என்று கூற வந்தது. கண்ணபிரானின் வரலாற்றை நோக்கியே எனக் கருதலாம். 'இராமனது மெய்யும் கிருட்டிணனது பொய்யும் நமக்குத் தஞ்சம்’ எனும் வைணவ சம்பிரதாய ஆன்றோர் வாக்கும் இதனை அரண் செய்யும்.

திருமால் திருக்குறள் அப்பனானபின் ‘மண்முழுவதும் அகப்படுத்து நின்ற பேருருவத்தைத் திரிவிக்கிரமன்’ என்பர்.