பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ நங்கையான ஆரண வல்லிக்கும், சைவநங்கையான ஆகம வல்லிக்கும் நிகழ்ந்த உரையாடல்களில் ஆரண வல்லி சிவனிடம் பல பிறப்புகள் உண்டு. திருமாலே பிறப்பிலி என்று நிறுவுகின்றாள். இப்படியான பல செய்திகளைக் கொண்டதே இந்த நூல் என்று அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.

வைணவர்கள் மிகுந்த பண்பாடுள்ளவர்கள் என்பதை இந்த ஐந்து இலக்கியங்களின் வாயிலாக இந்நூலாசிரியர் வெளிப்படுத்துவது வைணவ சமயத்திற்கே ஒரு முடிசூடுவது போல் உள்ளது. இரண்டு பாகவதங்களிலும் திருக்குருகை மான்யத்திலும் கூடற்புராணத்திலும் இந்த நாகரிகம் இருப்பதுகூடப் பெரிதல்ல; இரு சமய விளக்கத்தில் இரு பெண்களுமே ஒருவரை ஒருவர் விளித்துக் கொள்ளும்போது அழகான தொடர்கதையே சொல்லி விளித்துக் கொள்கிறார்களே அந்த அழகை ஆசிரியர் குறித்திருப்பது மிக மிக நயமானது. அதன் மூலம் வைணவர்கள் மிகவும் நாகரிகம் மிக்கவர்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுவது மிக மிகப் போற்றத்தக்கது.

ஏராளமான செய்திகளை உள்ளடக்கி நடுநிலையோடு வெளிப்படுத்தி, வைணவ மரபு வழிப் பண்பாட்டினை நமக்கெல்லாம் புரிய வைத்து, இந்த நூல்களைத் தேடிக் கண்டறிந்து படிக்க வேண்டும் என்று தூண்டுகிறாரே அதுவே மிகவும் உயிர்ப்பான செய்தியாகும். பதிப்பித்த சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தினரும் இந்நூலை வெளியிட்டதன் மூலம் தொண்டு புரிந்திருக்கின்றனர் என்றால் மிகையாகாது.

சென்னைப் பல்கலைக்கழக, தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனத்தின் இயக்குநராக உள்ள ஸ்ரீ சடகோபன் பொன்னடியான இப்பெருந்தகை நெடிதுநாள் வாழ்ந்து இப்படியான பல வைணவ நூல்களை அருள வேண்டும் என்று எம்பெருமானை வேண்டிக் கொள்கின்றோம்.

வாழ்க தமிழ் வளர்க மனிதநேய வைணவம்.

அன்புடன்
கோயம்பேடு,
ஜெ. பார்த்தசாரதி
சென்னை - 600 107.
(பேசி: 044-24754819)

-ix-