பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புரான இலக்கியம் - விளக்கம்


இளங்கோ அடிகள் அருகன் பெயரை புராணன் என்ற சொல்லால் குறிப்பிடுவர். அடியார்க்கு நல்லார் புராணன் என்ற சொல்லுக்குப் பழையவன்' என்று பொருள் கூறுவர். இராமன் சீதையோடு கானகம் சென்று கடுந்துயர் உழந்தான் என்பதை இளங்கோ அடிகள் நெடுமொழி என்று குறிப்பிடுவர். அடியார்க்கு நல்லார் நெடுமொழி - புராணக்கதை’ என்று விளக்குவர்.

புராணம் வடமொழி இலக்கியத்தில் போற்றத்தக்க ஒரு சிறந்த பிரிவு. ‘வேதாகம புராண இதிகாசம்’ என்பது ஒரு வடமொழி வழக்கு. ஏனைய யாவும் இவற்றினுள் அடக்கம் என்பது கருத்து. வடமொழி மட்டுமன்றி இந்திய மொழிகள் அனைத்திலுமே புராண இலக்கியம் ஒரு சிறப்பான பகுதி. புராணம் என்ற சொல் உபநிடதங்களிலும் காணப் பெறுகின்றது. புராண நூல்கள் அதர்வண வேதம் தோன்றிய காலத்திலேயே ஒரு சிறந்த இலக்கியமாகக் கொள்ளப் பெற்றன என்பர். மகாபாரதம் புராணப் பெயர்களைக் குறிப்பிடுகின்றது. வேத காலத்திற்கு முன் ஆதிபுராணங்கள் கதைகளாக வழங்கின என்றும், புத்தர் காலத்திற்கு முன் ஆதிபுராணங்கள் எழுதப் பெற்றன என்றும், ஏனையவை அவர் காலத்திற்குப் பின் எழுதப் பெற்றன என்றும் ஆன்றோர் கருதுவர்.

விஷ்ணுவே வேத வியாசராக அவதரித்தார் என்பது வடநூல் மரபு. ஒன்றாகக் கலந்து கிடந்த வேதங்களை அவர் இருக்கு, யகர், சாமம், அதர்வனம் என நான்காகப் பிரித்து அமைத்தமையால் அவர் வேதவியாசர் என வழங்கப்பெற்றார்.

புராணம்'’ என்கிற வடசொல் புரா-நவ’ என்ற இரு வேர்களிலிருந்து பிறந்தது; இதன் பொருள் பழமைக்கும் பழமையாய்ப் புதுமைக்கும் புதுமையாய் உள்ளது என்பர். இதுவே நாம் கருதும் புராணம். பழமையான எந்த வரலாறுகள் இன்னும்கூட மக்களிடையே சொல்லப் பெற்று வழங்குகின்றனவோ அவையே புராணம் என்பதாகும்.

வடமொழியில் ஒரு நண்பன் புத்தி சொல்லி நல்லொழுக்க உணர்ச்சியை ஊட்டுவது போல பழைய கதைகளைச் சொல்லிநீதியை உணர்த்துகின்றவை புராண இதிகாசங்கள் என்று பகரப் பெறும். எனவே, புராணங்களில் கதைகளே சிறந்திருப்பினும் அவை

5