பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புராண இலக்கியம்-விளக்கம்


ஶ்ரீபுராணம் (15-ஆம் நூற்றாண்டு) மணிப்பிரவாள நடையில் அமைந்தது. வைணவ மரபில் பின்பழகிய பெருமாள் ஜீயர் (13-ஆம் நூற்) செய்த ஆறாயிரப்படி குருபரம்பரா பிரபாவமும் பிள்ளை லோகஞ் ஜியர் (15-ஆம் நூற்) செய்த இராமாநுச திவ்வியாசார்ய சரிதையும் ஆசாரிய வரலாறு கூறும் புராணங்களென்றே கருதத் தக்கவை. இவை மணிப்பிரவாள உரைநடையில் அமைந்தவை. பின்னர் எழுந்த குருபரம்பரா பிரபாவங்கள் யாவும் உரைநடையிலேயே அமைந்தன.

தல புராணங்களின் தோற்றம்: ஒரு தலத்திலுள்ள சிவ அல்லது விஷ்ணு ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் அல்லது திருமால் புகழை விரித்துச் சொல்வது தல புராணம். இது தலத்தின் பெருமையையும் அங்குள்ள மூர்த்தியின் பெருமையையும், தீர்த்தத்தின் பெருமையையும் கூறி இந்த மூர்த்தியைப் பூசித்து நற்பேறு பெற்றவர்களின் வரலாற்றையும், கடைபிடிக்க வேண்டிய தர்மங்களையும், விலக்கத்தக்கனவாகிய அதர்மங்களையும், நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு முதலியவற்றோடு காவிய நயம்பட விரித்துரைப்பது ஒரு வகையில் மக்களுக்கு வாழ்க்கையில் மன நிறைவையும், பூர்ணமான சாந்தியையும். இறைவன் அருள் உண்டு என்ற நம்பிக்கையையும் அளித்து, அவர்களை நன்னெறிப்படுத்தி வந்துள்ளன. திருவாரூரில் பிறந்தால் முக்தி, தில்லையில் தரிசிக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, அருணையை நினைக்க முக்தி என்று எல்லாப் புராணங்களும் பெருஞ் சிறப்போடு எடுத்துச் சொல்கின்றன. ஆனால் எல்லாத் தல புராணங்களிலும் அந்தந்த தலத்தைத் தெரிசிக்கவும் நினைக்கவும் முக்தி என்று உறுதியாய்ச் சொல்லியிருத்தலையும் காண்கின்றோம். இதில் முரண் இல்லை. இவ்வாறு கூறியமையால் அவ்வவ்வூர் மக்களுக்குத் தங்களுர் வாழ்க்கையில் மகிழ்ச்சியுண்டாகி நாட்டுப் பற்றைத் தோற்றுவிக்கும் வித்தாயும் இருந்து வருகின்றன. இவ்வாறு எழுந்த தல புராணங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.

தல புராணம் என்று எண்ணும்போது ஒரு நிலையை மனத்தில் கொள்ள வேண்டும். 12-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் சமய அநுட்டானம் தமிழகத்தில் மூன்று பிரிவாக இருந்தது. ஒரு பிரிவு

9