பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



புராண இலக்கியம் - விளக்கம்



புராணத்தால் விளைந்த பயன் புராணங்கள் பொதுவாக வேத ஆகமங்கள் விதித்தவற்றையும் விலக்கியவற்றையும் கதைகள் மூலமாக மக்களுக்கு உணர்த்தி நன்னெறி புகட்டுவதற்காக எழுந்தவை, கதைகளோடு விதிகளும் விளக்கமாகச் சொல்லப் பெற்றிருக்கும். புராணங்களில் எண்ணற்ற விரதங்கள் சொல்லப் பெற்றிருக்கும். ஒவ்வொரு விரதம் சம்பந்தமாகவும் அதன் இலக்கணம் யாது, அதைக் கைக்கொண்டு பெறத்தக்க பலன் யாது, அதை முற்காலத்தில் அனுட்டித்துப் பயன் பெற்றவர் யாவர், அவர் சரிதம் எத்தகையது என்ற பொருளை எல்லாம் விளக்கிக் கூறுவதே புராணத்தின் இயல்பு.தமிழ்ப் புராணங்கள் செய்யுள் நடையில் எழுதப் பெற்றிருப்பினும், அவை சாமானியக் கல்வியுள்ளவர்கட்கும் எளிதில் பொருள் விளங்கக்கூடியவை. அன்றியும் மக்களை நல்வழிப்படுத்துதலே புராணத்தின் நோக்கமாதலால் மக்கள் மனத்தைக் கவரும் பொருட்டு அவை ஒன்பது சுவைகளும் அமையும்படிச் செய்யப் பெற்றுள்ளன. ஆனால் புராணச் சொற்பொழிவு கேட்பவர்கட்கு அண்மைக் காலம் வரையில் அவற்றில் ஆராய்ச்சி உணர்வு தோன்றியதில்லை. அனைத்தையும் அவர்கள் உண்மை என்றே நம்புகின்றனர். இதனை மூட நம்பிக்கை என்று கொள்வது சரியன்று. புராணப்பொழிவு ஆற்றுவோரிடத்துள்ள சொல்லாற்றலாலும், கேட்போர் மனம் பக்குவப்பட்டுச் செல்லும் நெறியினாலும் எல்லாமே மெய் என்று நம்ப முடிகின்றது.இதனால் புராணச் சொற்பொழிவாளர் தாம் எடுத்த போதனையில் வெற்றி அடைகின்றார். பாவச் செயலில் அச்சமும் வெறுப்பும் நிகழ வேண்டும் என்ற உணர்வோடு அவர் பொழிவு நிகழ்த்துகையில் மக்கள் மனத்தில் அச்சமும் வெறுப்பும் தோன்றுகின்றன. புண்ணியச் செயலால் மகிழ்ச்சியும் எழுச்சியும் விளைய வேண்டுமென்று அவர் திட்டமிட்டால் மக்கள் மனத்தில் அதே மகிழ்ச்சியும் அப்புண்ணியச் செயல் புரிகையில் ஊக்கமும் பிறக்கின்றன. எனவே, புராணக் கதைகள் மக்களை ஊக்குவிப்பதில் சிறந்த போக்குடையவை என்பதில் சிறிதும் ஐயமில்லை. புராணக் கதைகள் பொய்யுடையவை என்று இகழ்வதாலும் பயனொன்றும் விளைவதுமில்லை.திருவிளையாடல் புராணச் சொற்பொழிவு இல்லாத

13