பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புராண இலக்கியம்-விளக்கம்


தென்குமரி ஆயிடை எழுந்துள்ள தலங்கள் அனைத்திலும் சிறந்துள்ள சில தலங்களையேனும் சேவிக்க வேண்டும் என்று மக்கள் விரதம் பூண்டனர்.[1]

தலப்பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் தில்லைக்கோ, ஆரூருக்கோ, அண்ணாமலைக்கோ செல்ல இயலுவதில்லை.அந்தந்த ஊரிலும் ஆங்காங்கு உறைகின்ற அப்பனும் அம்மையும் அங்குள்ளோருக்கு நடராசராகவும் உமாபாகராகவும் காட்சியளித்து முக்தியளித்தனர் என்று தலபுராணங்கள் கூறுகின்றன. ஆகவே வசதியற்ற மக்கள் தங்கள் கோயிலிலேயே தாம் விரும்பும் காசி விசுவநாதரையும், அண்ணாமலையாரையும், பிற மூர்த்திகளையும் கண்டு மனநிறைவு பெறுகின்றனர். ஒரு சிற்றுாரில் உள்ள மக்கள் அனைவரும் இவ்வாறு வாழ்ந்த காலத்தில் தாயுமான அடிகள் கூறியவாறு'எல்லாம் உன் உடைமையே, எல்லாம் உன் அடிமையே’ (கருணாகரம்-3) என்ற நினைவு உண்டான காலத்தில் உண்மையான ஒருமைப்பாடும் நிலைத்தது.

தல புராணங்கள் தரும் ஒரே செய்தி கடையருக்கும் இங்குக் கடைத்தேற்றம் என்பது. ஒருவன் எவ்வளவுதான் பாவம் செய்திருப்பினும், அவன் தான் செய்த பிழைக்கு அகங்குழைந்து, இந்தத் தலத்தில் இந்தப் பொய்கையில் நீராடி இந்த இறைவனை வழிபட்டால், இறையருளுக்குப் பாத்திரமாகி, பாவம் நீங்கப் பெறுகின்றான் என்றே எல்லாப் புராணங்களும் உறுதியாய்ச் செப்புகின்றன. பிற்காலத்தில் நாம செபம் என்பது ஒருதனிப்பெருஞ் சடங்காகத் தமிழகமெங்கும் வளர்ந்துள்ளது. 13-ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டு வரை வளர்ந்துள்ள எல்லாத் தல புராணங்களும் சாத்திரங்களும் நாம செபத்தின் மகிமையைப் பெருக்கியுரைக்கின்றன.


  1. 5. என்னுடைய நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பற்றிய ஆய்வினை முன்னிட்டு வைணவ திவ்விய தேசங்கள் 108-ல் 102 திவ்விய தேசங்களைச் சேவித்து ஆறு திருத்தலப் பயண நூல்கள் எழுதி வெளியிட வாய்ப்பு ஏற்பட்டது. தற்சமயம் 108 திவ்விய தேசங்கள் - ஓர் ஆய்வு என்ற தலைப்பில் பிஎச்டி பட்டத்திற்கு ஆய்வு செய்யும் மாணாக்கர் ஒருவருக்கு வழிகாட்டியாக அமையும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

15

3