பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருப்பதைப் பார்க்கும்போது அறிமுகமாகாத இலக்கியங்களை அறிமுகப்படுத்திய தொண்டு புரியும்.

'இதிகாச பாகவதம்’ செவ்வைச் சூடுவாராலே இயற்றப்பட்டது. ‘புராண பாகவதம்’ நெல்லி நகர் அருளாளதாசரால் இயற்றப்பட்டது. இவ்விரண்டுமே ‘கண்ணன் கதை’ கூறும் பாகவதங்களே, எனினும் ‘இதிகாசபாகவதத்தை’விடப் ‘புராண பாகவதம்’ பலர்க்கும் அறிமுகம் ஆகாததால் அதன்பின் வைத்துள்ளார்.

அதற்கடுத்து உள்ளது ‘திருக்குருகை மான்மியம்’. இது திருக்குருகைப் பெருமான் கவிராயரால் எழுதப்பட்டது. நம்மாழ்வார் பற்றிய காவியம் இதுவாகும். நம்மாழ்வாரையே எல்லோரும் அறிவர். ஆனால் நம்மாழ்வார் பெயரோடு இணைந்த ‘மாறன்பா - பாவினம்’, ‘மாறன் அகப்பொருள்', 'மாறன் அலங்காரம்’ போன்ற நூல்களையும் இயற்றிய திருக்குருகைப் பெருமான் கவிராயரால் இயற்றப்பட்ட திருக்குருகை மான்மியத்தை அறியாதாரே அதிகம். அப்படியான அழகிய நூலினை அறிமுகம் செய்துள்ளார் வைணவ இலக்கிய மாமணியான நமது ரெட்டியார் அவர்கள்.

அதற்கடுத்து ‘கூடற்புராணத்தை’ அறிமுகம் செய்கிறார். கூடல் அழகர் திருக்கோயிலைப்பற்றிய தலபுராணமே இந்நூல்.இதை இயற்றியவர் பெயரும் தெரியவில்லை. இந்நூலின் சிறப்புகளும் தெரியவில்லை. இப்படியான ஒரு அரிய நூலை அறிமுகம் செய்கிறார் ஆசிரியர்.

அடுத்தது ‘இரு சமய விளக்கம்’. இது தற்போது ‘நாகலாபுரம்’ என்று வழங்கப்படும் ‘அரிதை’ என்ற ஊரில் பிறந்த அரிதாசரால் இயற்றப்பட்டது. இந்த நூலைப் பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனாலும் என்ன உள்ளீடு என்று பலருக்குப்புரியாதிருந்தது. அதைப் புரிய வைத்துள்ளார் இந்த நூலாசிரியர்.

இப்படிப் படிப்படியாக மேலும் மேலும் அறிமுகமாகாத நூல்களை அறிமுகப்படுத்தியதே இவருடைய பெருந்தொண்டு எனலாம். இந்த விதத்தில் இவரைப் போற்ற வைணவ உலகம் மிகவும் கடப்பாடு கொண்டுள்ளது.

- vii-