பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தோழியிற் கூட்ட மரபுகள்
85

யும் என்பதனான்; அது கண்டு புணர்ச்சி யுண்மை அறிந்துகொள்ளும் என்பது. அஃதன்றி, அவளை வரையணங்காகவும் சொல்லும். இவை யாவும் நாண நாட்டம் ஆகும். இங்ஙனமே தோழி தலைவியை நோக்கி, 'நம்புனத்து உதிரம் அளைந்த கொம்புடையதோர் களிறு போந்தது' என்னும்; அது கேட்டுப், 'பல்காலும் இவ்விடத்து வந்தியங்குவான் எம்பெருமானாதலான், அவனைக் களிறு ஓர் ஏதம் செய்தது கொல்லோ?’ என்று நடுங்குவாளாம். இது நடுங்க நாட்டம் ஆகும். அது கேட்டுக் கூட்டமுண்மை உணரும்". மேலும், அவ்வுரைகாரர் 'முன்னுற வுணர்தல்' என்பதற்கு முன் உறவு உணர்தல்-முன் கூட்டமுண்மை உணர்தல் எனவும் பொருள் கூறுவர்.[1]


தொல்காப்பியனாரும் தோழியின் இவ்வாராய்ச்சியை,

நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்
செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும்
புணர்ச்சி யெதிர்ப்பா டுள்ளுறுத்து வரூஉம்
உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை
மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும்"[2]


என்ற நூற்பாவின் பகுதியால் உணர்த்துவர். இதனை உரையாசிரியர் இளம்பூரணர் இவ்வாறு விளக்குவர்: "நாற்றம் என்பது, பூவினானும் சாந்தினானும் தலைவன் மாட்டுளதாகிய கலவியாற் தலைவி மாட்டுளதாய் நாறுதல். தோற்றம் என்பது, புணர்ச்சியான் வரும் பொற்பு. ஒழுக்கம் என்பது, ஆயத்தாரோடு வேண்டியவாறு ஒழுகுதலின்றித் தன்னைப் பேணியொழுகுதல். உண்டி என்பது, உண்ணும் அளவில் குறைதல். செய்வினை மறைத்தல் என்பது, பூக் கொய்தலும் புனலாடலும் போலும் வினைகளைத் தோழியை மறைத்துத் தனித்து நிகழ்த்துதல். அன்றியும், தலைவன் செய்த புணர்ச்சியாகிய கருமத்தினைப் புலப்படவிடாது தோழியை மறைத்தலும் என்றுமாம். செலவினும் என்பது, எத்திசையினும் சென்று விளையாடுவாள் ஒரு திசையை நோக்கிச் சேறல். பயில்வினும் என்பது, ஒரிடத்துப் பயிலுதல். புணர்ச்சி எதிர்ப்பாடு என்பது, புணர்வதற்கு முந்துற்ற காலம். உள்ளுறுத்தல் என்பது, உட்கோடல். நாற்றம்

  1. 12.இறை.கள.-9(உரை காண்க)
  2. 13.களவியல்-24(இளம்).