பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழியிற் கூட்ட மரபுகள் 115

பகுதியை முன்னும், சேட்படைப் பகுதியைப் பின்னும் நிறுத்தித் திருக்கோவையாரோடு ஒத்து நிற்கின்றது. அன்றியும், அம் மடற்றிறத்துக்குச் சேட்படையை ஏதுவாகக் கூறித் தொல் காப்பியத்துடனும் ஒத்து நிற்றலையும் காணலாம். மேலும் இறையனார் களவியலுரை, திருக்கோவையார் உரை கூறும் ஏதுவினையும் சேட்படைக்கு உரைக்கும். ஆகவே, இவை தமக்குள் உள்ளியைந்ததோர் இயைபு உண்டென்பது புலனாகின்ற தன்றோ? இன்னும், பலவகை ஏதுக்களால் நிகழும் ஒரு செய்தி யைக் கூறுங்கால் ஒருவர் ஒர் ஏதுக் கூறி நிறுவினால், மற்றொருவர் மற்றோர் ஏதுக்கூறி நிறுவுவாராதலின், அதனால் அவை முரண் படுதல் இல்லை என்பதும் ஈண்டு அறியத் தக்கது

        மடற்றிறம்

மடற்றிறம் என்பது, தோழியை உடன்படுத்தும் தலைமகன் அதற்கொரு கருவியாகத் தான் மடன்மாவில் ஏற இருக்கும் வகை யினைத் தெரிவித்தலாகும். மா என்பது, குதிரை; மடல் என்பது, பனை மடல். ஆகவே மடன் மா என்பது பனைமடலால் செய்யப் பெற்ற குதிரையாயிற்று. தலைவனது குறையிரந்த எண்ணத் தோடு ஒத்து மதிடயும்பட்ட தோழி தன் தலைவியின் கருத்தை மெல்ல அறிந்து கொண்டு பின்பு அதனைத் தலைவனிடம் சொல்லத் தொடங்குங்கால் தனக்குள் தோன்றிய நாணத்தால் தலைவனே முதன்முதல் குறையிரந்து கேட்டலை விரும்பிய வளாய் வாளா இருப்பாள். தலைமகன் மதியுடம்படுத்து தலைக் கருதி முதன்முதல் தோழியிடம் சென்றபொழுது அவள் பெருநாணமுடையவாளாக இருந்தாள். தலைமகன் அவளைக் சந்தித்தலிருந்து மிக நெருங்கிப் பேசி அவளுடன் மிக்க உரிமை யுடையவனாய்ப் பழகினமையால் அவள் நாணம் வரவரக் குறைந்து கொண்டே வந்தது. மேலும், தோழி தலைவனுக்கு அமைதி தரும் மறுமொழியை எவ்வளவு காலம் கூறாது நீட்டிக் கின்றாளோ அவ்வளவு காலமும் தலைவனது ஆற்றாமையும் மிகுந்து கொண்டே போகும். அவ்வாற்றாமையைக் கண்ட தோழி அறிவும் அன்பிரக்கமும் உடையவளாதலின், அவைதாம் மிகுங்கால் அவள் நாண் கெடும். இங்ங்ணம் தலைவனது