பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழியிற் கூட்ட மரபுகள் 141


கானவன் கிழங்கொடு விலை வரம்பு அறியா மணியையும் பெற்றாற்போல மான் வேட்டைமேல் சென்ற தலைவன் மான் விழி போன்ற மையல் விழியையுடைய தலைவியையும் பெற்றான் என்ற குறிப்பினையும் பாட்டில் கண்டு மகிழலாம். கற்புக்குக் கேடு வருங்கால் பெண்ணுக்குப் பெருந்துணிவு பிறக்கும் என்ற உண்மையை அகத்திணை இலக்கியங்களில் காணலாம். இத்தகைய ஒழுக்கத் துணிவைப் பெற்றோரும் வரவேற்பர்; ஒருவனுடன் தன் மகள் உறவு உடையாள் என்று அறிந்த பின்னர்த் தம் மகளின் கற்பு மாசுபட மாற்றவனுக்கு மணம் பேச நினையார். நடந்தவையாவும் தெய்வச் செயலால் நிகழ்ந்தவை என்று நினைந்து மகிழ்ந்து உற்றவனுக்கே மணவினை முடிப்பர். இத்தகைய ஒரு நிகழ்ச்சியை முல்லைக் கலி காட்டுகின்றது. ஏறுதழுவல் விழா நடைபெறுங்கால் ஏறு தழுவின காளையின் சென்னியிலிருந்த கண்ணியைக் கொம்பிலே கொண்ட அப்பெரிய புகரேறு துள்ளுகையில் அதிலுள்ள பூ முல்லைத் தலைவியின் கூழையின் வீழ்ந்தது. அதனை அவள் எடுத்து அன்புடன் முடித்துக் கொண்டாள். இதனால் அலர் எழுமோ என்று மனங் கவல்கின்றாள். அவளுடைய உண்மைக் காதலை அறிந்த தோழி அவள் தமர் வரைவுக்கு உடம்பட்டதைக் கூறி மகிழ்விக்கின்றாள்.

'வருந்தாதி;
மண்ணிமா சற்றநின் கூழையுள் ஏறஅவன்
கண்ணிதந் திட்ட தெனக்கேட்டுத் திண்னிதாத்
தெய்வமால் காட்டிற்று இவட்கென நின்னைஅப்
பொய்யில் பொதுவற்கு அடைசூழ்ந்தார் தந்தையோடு
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு.' . .
   (மண்ணி-கழுவி; மாசு-அழுக்கு: கூழை-முடியுள் அகப் படாத தலைமயிர்; திண்ணிதாக-வலிதாக; தெய்வமால்-தெய்வமாகிய திருமால்; பொதுவன்-இடையன்; அடை-அடுத்தலை (கொடுத்தலை): ஐயன்மார் - தமையன்மார்)
   
என்ற பாடலில் இதனைக் கண்டு மகிழலாம். இங்ஙனம் பல்வேறு விதமாக உரைக்கும் நொதுமலர் வரைவு பற்றிய பாடல்களை அகத்திணை இலக்கியத்தில் பயின்று மகிழலாம்.

____________________

     125. கலி-107 (முல்லை-7).